சூரியக் கட்சி ஜூனியர் - சீனியர் பஞ்சாயத்து நிலவரம் | உள்குத்து உளவாளி

சூரியக் கட்சி ஜூனியர் - சீனியர் பஞ்சாயத்து நிலவரம் | உள்குத்து உளவாளி
Updated on
1 min read

இடைத்தேர்தல் இடைச் செருகலாக வந்துவிட்டதால் சூரியக் கட்சியில் புகைய ஆரம்பித்த ஜூனியர் – சீனியர் பஞ்சாயத்துகள் கொஞ்சம் அடங்கி இருக்கிறதாம். சீனியர் சிட்டிசன்கள் யூத்களுக்கு வழிவிட வேண்டும் என கட்சித் தலைமை செயற்குழு பிரகடனம் செய்ததை அடுத்து, பலரும் தங்களது வாரிசுகளுக்கு வாகனம் பிடிக்க ஆரம்பித்து விட்டார்களாம். தலைமையின் அறிவிப்பால் தங்களுக்கு விமோசனம் கிடைக்கும் என எதிர்பார்த்துக் காத்திருந்த பலரையும் இது பெரும் சோகத்தில் தள்ளி இருக்கிறது.

இத்தனை நாளும் தந்தைக்கு தடுக்கு தூக்கினோம் இனி மகனுடன் மல்லுக்கட்ட வேண்டுமா என பல மாவட்டங்களில் பட்டிமன்றம் நடக்கிறதாம்.

இதனிடையே, அதிகாரத்தில் இருந்தபோது கொஞ்சம் அடக்கியே வாசித்த தலைவர் வீட்டுப் பெண் வாரிசு, இப்போது கட்சிக்குள் தனது கருத்தை சுதந்திரமாக பேச ஆரம்பித்திருக்கிறாராம்.

அவர் பக்கம் நியாயம் இருப்பதால் தலைமையும் அவர் சொல்வதை காதுகொடுத்துக் கேட்கிறதாம். கட்சிக்காக புதிதாக பொறுப்புக்கு வருகிறவர்களை நியமனங்கள் மூலமாகவே நிரப்பிவிடலாம் என்று சின்னவர் யோசனை சொன்னாராம். இதன்மூலம் தனது விசுவாசிகளை அல்லுச் சில்லு இல்லாமல் அதிகாரத்துக்கு கொண்டு வந்துவிடலாம் என்பது அவரது கணக்காம்.

இந்த சூட்சுமத்தைப் புரிந்து கொண்டு அதை கடுமையாக ஆட்சேபித்த பெண் வாரிசு, “அதெல்லாம் வேண்டாம். தலைவர் காலத்தில் இருந்ததுபோல் யாராக இருந்தாலும் தேர்தல் மூலமே பொறுப்புக்கு வரட்டும். தேர்தலில் தங்கள் செல்வாக்கை நிரூபித்து முடிந்தவர்கள் கரை சேரட்டும். இனியும் ரப்பர் ஸ்டாம்ப் குத்தி பதவிக்கு வருவதை ஊக்குவிக்க வேண்டாம்” என்று அழுத்தமாகச் சொன்னாராம்.

அதேசமயம், சீனியர்கள் மாவட்டச் செயலாளர் பொறுப்புகளில் நீடிக்க முடியாவிட்டாலும் இதுவரையான அவர்களின் கட்சிப் பணிக்கு மதிப்பளிக்கும் வகையில் அவர்களுக்கு உரிய மரியாதையையும் நாம் வழங்க வேண்டும்” என்று சொன்னாராம். இந்தக் கருத்தை தலைவரும் ஏற்றுக் கொண்டதாகச் சொல்கிறார்கள். இடைத்தேர்தல் முடிந்ததும் இந்த பஞ்சாயத்து எல்லாம் மேடைக்கு வரும் என எதிர்பார்க்கலாம்.

சூரியக் கட்சி ஜூனியர் - சீனியர் பஞ்சாயத்து நிலவரம் | உள்குத்து உளவாளி
‘அ​வார்​டு’ நகர் ‘வேடிக்கை தெரு’ சலசலப்பு | உள்குத்து உளவாளி

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in