

கடல் மாவட்ட சூரியக் கட்சி, மறுசீரமைப்பில் நான்காக பிரிந்திருக்கிறது. அதில் தெற்கு மாவட்டத்துக்கு தனது புதல்வரை செயலாளராக்க இப்போதைய ‘வாசனைத் திரவிய’ மாவட்டச் செயலாளர் தீவிரம் காட்டுகிறாராம். சீனியர் சிட்டிசன் கோட்டா எவிக் ஷனில் தான் வெளியேற வேண்டி இருப்பதால் தனது இடத்தை மகனுக்கு ரிசர்வ் செய்கிறாராம் அவர். அத்தோடு விட்டாலும் பரவாயில்லை, கிழக்கு மாவட்டத்துக்கு சிவனாரின் மகனான தனது உறவுக்கார ஒன்றியப் புள்ளியை முன்னிறுத்துகிறாராம் திருவாளர் ‘திரவியம்’.
இது அந்தப் பகுதியில் பெரும் புகைச்சலைக் கிளப்பி இருக்கிறதாம். சின்னவர் கைதான சமயத்தில் அந்தப் பகுதியில் 47 பேர் தான் கைதானார்கள். இவர் வீட்டைவிட்டே வெளியில் வரவில்லை. அப்படிப்பட்டவருக்கு மா.செ பதவியா என கொந்தளிக்கிறார்களாம். இதேபோல் வடக்கு மாவட்டத்துக்கு ‘சபாக்’காரர் பெயரை தலைமை பரிசீலனையில் வைத்திருக்கிறதாம். ஆனால், அங்கேயும் ஆனந்தமான பெண்மணி உள்ளிட்டவர்களை உசுப்பிவிடுகிறதாம் திருமிகு ‘திரவியம்’ தரப்பு.