

மறு சீரமைப்பில் ‘காசி’ மாவட்டத்தின் இரண்டு செயலாளர்களுக்கும் குட்பை சொல்லும் முடிவில் இருக்கிறதாம் சூரியக் கட்சி. கடந்த தேர்தலில் சூரியக் கட்சி சின்னத்தில் நின்று வெற்றி பெற்ற ‘மலர்ச்சி’ கட்சியின் ‘இந்திரனான’ தலைமைக் கழக நிர்வாகியானவர் ‘மலர்ச்சி’ தலைமையின் நெருக்குதலுக்கு அடிபணியாமல் “நான் சூரியக் கட்சி எம்எல்ஏ-வாகவே தொடர்வேன்” என்று சொன்னதுடன் ‘மலர்ச்சி’ தலைவரின் வாரிசுக்கு சவாலும் விட்டார்.
அவரை அங்கீகரிக்கும் விதமாக வடக்கு மாவட்டத்துக்கு செயலாளராக்கும் முடிவில் இருக்கிறதாம் சூரியக் கட்சி தலைமை. அதற்காகவே அவரது ‘நல்லூர்’ தொகுதியையும் இன்னொரு தொகுதியையும் மட்டுமே வடக்கு மாவட்டமாக பிரித்திருக்கிறார்கள்.
அதேபோல் தெற்கு மாவட்டச் செயலாளர் பதவியை தலைமைக் கழகத்தில் இருக்கும் ‘அன்பகத்’ தலைவரின் ‘கதிரான’ வாரிசுக்கு கொடுக்க பேச்சு நடக்கிறதாம். இதே பதவிக்கு இலைக் கட்சி வரவான முன்னாள் வானளாவ அதிகாரம் கொண்டவரின் வக்கீல் வாரிசும் ஆள், அம்பு, சேனையைத் திரட்டுகிறாராம்.