

அண்மையில் திருத்தி அமைக்கப்பட்ட சூரியக் கட்சி பைலாக்கள் பல மாவட்டங்களிலும் சூட்டைக் கிளப்பி இருக்கிறது. ‘பேட்டை’ மாவட்டத்துக்கு தற்போது மாவட்ட தலைமையாக இருக்கும் சீனியருக்கு பதவி தங்காது என்பதால் அவரது இடத்தைப் பிடிக்க பலபேர் முட்டி மோதுகிறார்களாம். இந்த மாவட்டம் இப்போது வடக்கு, தெற்கு என இரண்டாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
இதில், வடக்கு மாவட்டத்துக்கு தலைமை ஏற்க குக்கர் கட்சியில் இருந்து ஜாகை மாறிய ‘கனவு’ நாவல் நாயகன் காய் நகர்த்துகிறாராம். தேர்தலில் அவருக்கு சீட் கொடுத்து கவுரவித்த தலைமைக்கும் அவர் மீது பரிவு இருக்கிறதாம்.
அதேசமயம் தெற்கு மாவட்டத்துக்குத்தான் ஏகப்பட்ட கிராக்கியாக இருக்கிறதாம். சூரியக் கட்சியின் சிடுசிடு சீனியரின் பினாமி ரேஞ்சுக்கு பேசப்படும் கிரஷர் கம்பெனி முதலாளியானவர் தெற்கு மாவட்டத் தலைமைப் பதவிக்கு ரொம்பவே மெனக்கிடுகிறாராம்.
ஏற்கெனவே கஜானா பொறுப்பில் இருக்கும் அவர் சீனியரின் சிஷ்யர் என்பது ஒருபுறமிருக்க, சூரியக் கட்சித் தலைவரின் மூத்த மகளும் இவருக்காக பிரத்யேகமாக பிரஷர் கொடுக்கிறாராம். ‘நவாப்’ தொகுதியின் முன்னாள் எம்எல்ஏ-வான அந்த ‘அப்பா’ ஒருபக்கமும், பெயருடன் வேலை ‘வடிவாய்’ சேர்த்து வைத்திருக்கும் ஒன்றியப் புள்ளி ஒருவரும் தனது பரிவாரங்களைத் திரட்டிக் கொண்டு ஆலயத்துக்கும் பேட்டைக்கும் ட்ரிப் அடித்துக் கொண்டிருக்கிறார்களாம்.
இதற்கு நடுவே, தற்போது சிட்டிங் தலைமையாக இருப்பவர், “அண்ணா காலத்து ஆளான என்னையவே ஓரங்கட்டுனா தலைமைக் கழகத்துல இருக்கிற மத்தவங்கள எல்லாம் என்ன பண்ணுவாங்களாம்?” என்று தனக்கு நெருக்கமானவர்களிடம் எக்குத் தப்புக் கேள்வி கேட்டுக்கொண்டு இருக்கிறாராம்.