

ஹார்ஸ் பேர குற்றச்சாட்டில் சுற்றி வளைக்க முடியாமல் போன சுறுசுறு கரூர் தளபதியை வேறு ஏதாவது கொக்குச் சிக்கலில் மாட்டித் தூக்கி ‘கோட்டம்’ பார்க்க விசில் அரசு வேகம் காட்டி வருகிறதாம்.
தனக்கெதிராக வகுக்கப்படும் இந்த சக்கர வியூகத்தில் சிக்காமல் இருக்க கரூர் தளபதி மலர் கட்சி பக்கம் பேச்சுவார்த்தை நடத்தினாராம். அந்தப் பக்கம் தெளிவான சிக்னல் கிடைக்காததால் தாய்க் கழகத்துக்கு தாக்கீது அனுப்பினாராம். இதற்கு நடுவில், சென்னை வந்த உள்துறை தலைவரை சந்திக்க எடக்கானவர் விரும்பினாராம்.
ஆனால், சந்திப்புக்கு ஷெட்யூல் ஒதுக்கவில்லையாம். இதன் பின்னணியில் கொங்கு ‘மணியானவர்’ இருக்கலாம் என சந்தேகிக்கும் எடக்கானவர், ‘மணியானவருக்கு’ செக் வைக்க கரூர் தளபதியை உள்ளே இழுத்துக் கொள்ளலாமா என ஆலோசனை நடத்தி வருகிறாராம். அதனால் கொஞ்ச நாளைக்கு தடம் தெரியாமல் இருப்போம் என முடிவெடுத்து அமைதி காக்கிறாராம் கரூர் தளபதி.
இதற்கு நடுவில், அவருக்கு வேண்டப்பட்ட சிப்பாய்கள் சிலர் மீண்டும் விசில் எம்எல்ஏக்களை தூக்குவதற்கான ‘தூண்டிலைத்’ தூக்கி இருப்பதாக உளவுத் துறை நோட் போட்டிருக்கிறதாம். இவர்களின் இந்த முயற்சியில் தொழிலதிபர்கள் சிலரும் கதர் பார்ட்டியின் காலாவதி தலைவர் ஒருவரும் கைகோத்திருப்பதையும் உளவுத்துறை உளவறிந்து சொல்லி இருக்கிறதாம்.