

சூரியக் கட்சி ஆட்சியில், அரசுப் பள்ளி மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்தும் வகையில் ‘மாதிரி பள்ளிகள் திட்டம்’ அமல்படுத்தப்பட்டது. இதன்படி, மாவட்டத்துக்கு ஒரு பள்ளி வீதம் மொத்தம் 38 பள்ளிகள் தொடங்கப்பட்டன.
அரசுப் பள்ளிகளில் 8-ம் வகுப்பில் டாப் லெவலில் தேர்ச்சி பெறும் 3 மாணவர்களைத் தேர்வு செய்து, உண்டு உறைவிடப் பள்ளிகளான மாதிரிப் பள்ளிகளில் சேர்த்து, அவர்களது கற்றல் திறனை மேம்படுத்துவதுதான் இதன் நோக்கம்.
பெரும்பாலான மாவட்டங்களில் இத்தகைய மாதிரி பள்ளிகள் தனியார் கல்லூரி வளாகங்களில் தொடங்கப்பட்டன. அதற்கான செலவுகளை அரசே அந்த கல்வி நிறுவனங்களுக்கு செலுத்தும். அதன்படி ‘ரீல்ஸ் புகழ்’ மந்திரியின் மாவட்டத்தில் இந்த பள்ளியானது அவர் படித்த நான்கெழுத்து தனியார் கல்லூரியிலேயே இதுவரை நடைபெற்று வந்தது.
‘மாண்புமிகு ரீல்ஸ்’, மந்திரி ஆனதும் அந்த கல்லூரி நிர்வாகம் ‘எங்க ஸ்டூடன்ட்’ என்று அவரை விளம்பர வெளிச்சம் போட்டெல்லாம் கொண்டாடியது. இந்த நிலையில், அந்த கல்லூரியில் செயல்பட்டு வந்த மாதிரிப் பள்ளியை தற்போது இன்னொரு மூன்றெழுத்து தனியார் கல்லூரிக்கு அதிரடியாக மாற்றி விட்டாராம் ‘ரீல்ஸ் மந்திரி’. அந்த கல்லூரி நிர்வாகஸ்தரும், மந்திரியும் ஒரே சாதிக்காரர்களாம்.
தேர்தலின்போது, ‘ரீல்ஸின்’ விக்டரிக்காக அந்த கல்லூரி தரப்பில் பலவிதத்திலும் உறுதுணையாக நின்றார்களாம். அதற்கான நன்றிக் கடன்தான் இது என உள்விவரம் அறிந்தவர்கள் உளவுத் தகவல் சொல்கிறார்கள். ஆனால், சரியான பொதுப் போக்குவரத்து வசதி இல்லாத இந்த இடத்துக்கு பள்ளியை மாற்றினால் பிள்ளைகள் வந்து போவது எப்படி என பெற்றோர் முணு முணுக்கிறார்களாம்.