

‘ஹார்ஸ் பேர’ வியாபாரத்தில் விசில் எம்எல்ஏ-க்களை வீழ்த்த சூரியக் கட்சி தரப்பில் சதி ஆலோசனைகள் நடந்ததாகச் சொல்லப்படும் நிலையில், கோழிப்பண்ணை மாவட்டத் தலைநகர் தொகுதி எம்எல்ஏ-வுக்கு யார் மூலமாகவோ 10 ‘சி’ கைமாறியதாக விசில் பிள்ளைகளே வில்லங்கச் செய்தி பரப்புகிறார்களாம்.
இதே மாவட்டத்தில், ‘மங்கலமான’ தொகுதி எம்எல்ஏ-வான ‘சந்திரமானவர்’ ஏற்கெனவே இலைக் கட்சியில் இருந்தவர். தேர்தல் சமயத்தில் இவருக்கு சரியான பிரச்சார வாகனங்கள் கூட இல்லாமல் ஒரே ஒரு ஆட்டோவை வைத்து ரவுண்டடித்துக் கொண்டிருந்தார்கள்.
இந்த நிலையில், அண்மையில் இவர் புத்தம் புது இன்னோவா கார் ஒன்றுக்கு சொந்தக்காரர் ஆகி இருக்கிறார். இதற்கும் ஒரு கதை சொல்பவர்கள், “அந்த ‘மங்கலமான’ தொகுதியின் சூரியக் கட்சியைச் சேர்ந்த சாம்ராட் அரசனின் பெயர் கொண்ட ஒன்றியச் செயலாளர் கல் குவாரிகள் மற்றும் சவுடு மண் பிசினஸில் கில்லியாக கொடிகட்டிப் பறப்பவர்.
ஆட்சி மாற்றத்தால் அந்தக் கொடியை யாரும் கீழே இறக்கிவிடக் கூடாது என்பதற்காக அண்ணன் தான் தொகுதி எம்எல்ஏ மக்கள் பணி ‘ஆற்றுவதற்காக’ தனது செலவில் இன்னோவாவை இறக்குமதி செய்து கொடுத்திருக்கிறார்” என்கிறார்கள்.