

கதர் பார்ட்டியுடன் விசில் பார்ட்டி அநியாயத்துக்கு ஒட்டி உறவாடுவதை மலர் கட்சித் தலைமை அறவே ரசிக்கவில்லையாம். போதாதுக்கு, ‘வில்லான’ விசில் அமைச்சர் “2029-ல் மிகப்பெரிய அரசியல் மாற்றம் நடக்கும். அப்போது நீட் தேர்வு ஒழிக்கப்படும். அதற்கான வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன” என்று பேசி டெல்லியை சீண்டி இருக்கிறார்.
இதையடுத்து, விசில் பார்ட்டி ஆட்சிக்கு எந்த விதத்தில் செக் வைக்கலாம் என்பது குறித்து பல திசைகளிலும் ஆலோசனை நடத்தி வருகிறதாம் மலர் கட்சித் தலைமை. இந்த நிலையில், ‘குதிரை பேரம்’ தொடர்பான முக்கியக் கட்சிகளின் புகார்களை வைத்து லோக்பவன் தலைவர் மூலமாக ஆட்சிக்கு நெருக்கடி உண்டாக்க முடியுமா என்று உயர்மட்ட அளவில் ஆலோசனை நடத்தப்பட்டதாகச் சொல்கிறார்கள்.
இதையெல்லாம் தெரிந்து கொண்டுதான், தமிழ்த்தாய் வாழ்த்து தொடங்கி நீட் போராட்டங்கள் வரை அனைத்திலும் டெல்லியை பகைக்காமல் அனுசரித்தே போகிறதாம் விசில் தலைமை. இருந்தபோதும், பட்ஜெட் கூட்டத் தொடருக்கு முன்னதாகவே லோக்பவன் தலைவர் மூலமாக அதிரடி சர்ச்சை ஒன்று கிளப்பப்படலாம் என்று சொல்பவர்கள், “சுதந்திரதினத்தன்று முதன்மையானவரை கொடியேற்றவிடாமல் தடுக்க முடியுமா என்று கூட ஆலோசனைகள் போய்க்கொண்டிருக்கின்றன” என்கிறார்கள்.
இதனிடையே, விசில் பார்ட்டி எம்எல்ஏ-க்கள் சிலர் மீது தலைமைக்கு கொஞ்சமே கொஞ்சம் டவுட் வந்திருக்கிறதாம்.
அப்படி லிஸ்ட் எடுக்கப்பட்ட நபர்களின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகச் சொல்லி போலீஸ் ஷேடோ போடப் போகிறார்களாம். இந்த ஷேடோக்களின் தலையாய கடமையே அந்த எம்எல்ஏ-க்கள் எங்கெல்லாம் போகிறார்கள் யாரோடு எல்லாம் ‘லிங்கில்’ இருக்கிறார்கள் என்று துப்பறிந்து மேலிடத்துக்கு தகவல் சொல்வதுதானாம்.