

‘பெரியகோயில் மாவட்டத்தில் விசில் கட்சியின் ‘வினோத’ மாண்புமிகுவும் கூட்டணிக் கட்சியின் ‘கான்’ மாண்புமிகுவும் ‘யாருக்கு முதல் மரியாதை’ என்பதில் அதிகாரிகளை சுத்தவிட்டுக் கொண்டு இருக்கிறார்களாம்.
புரோட்டோகால் படி, ‘வினோத’மானவர் ‘கானை’ விட 11 இடங்கள் பின்னால் இருக்கிறாராம். இதனால், அரசு நிகழ்ச்சிகளுக்கு அழைப்பிதழ் அச்சடிக்கும் அதிகாரிகள், ‘கான்’ பெயரை முதலில் போட்டு அவருக்குக் கீழே ‘வினோத’மானவரின் பெயரை போடுகிறார்களாம். இதைப் பார்த்துவிட்டு எரிந்து விழுகிறாராம் மிஸ்டர் ‘வினோதம்’.
புரோட்டோகால் எல்லாம் கிடக்கட்டுங்க... நான் தானே இந்த மாவட்டத்துக்கு பொறுப்பு மாண்புமிகு. என் பேரைத்தானே நீங்க முதல்ல போடணும்” என்று அதிகாரிகளை லெஃப்ட் அண்ட் ரைட் வாங்குகிறாராம். இந்த நிலையில், அண்மையில் அந்த மாவட்டத்தின் ‘கும்ப’ நகரில் நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாமில் இரண்டு மாண்புமிகுக்களும் கலந்துகொள்வதாக ஏற்பாடு.
ஆனால், ‘கானுக்கு’ முன்கூட்டியே இதுகுறித்து தகவல் தெரிவிக்காத அதிகாரிகள், அழைப்பிதழோடு போய் அவரை பார்த்தார்களாம். அதை வாங்கிப் பார்த்துவிட்டு, “இந்த நிகழ்ச்சி குறித்து எனக்கு முன்கூட்டியே தகவல் சொல்லாமல் இப்படி திடீரென வந்து சொன்னால் எப்படி?” என்று கேள்வி எழுப்பியதுடன், “எனது பெயரை எப்படி இரண்டாவதாக போட்டீர்கள்? என்னால் இந்த நிகழ்ச்சிக்கு வரமுடியாது” என்றும் சூடானாராம்.
இதையடுத்து புதிதாக இன்னொரு அழைப்பிதழை ரெடி செய்த அதிகாரிகள், இருவரது பெயரையும் அழைப்பிதழின் இரண்டு பக்கத்திலும் சரிக்கு சமமாகப் போட்டு சமாளித்தார்களாம். அந்த அழைப்பிதழை பார்த்த பிறகே மிஸ்டர் ‘கான்’ வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டாராம். மக்கள் பிரச்சினைகளை விட இந்த ‘மரியாதை’ பிரச்சினைதான் பெரியகோயில் மாவட்டத்தில் அதிகாரிகளுக்கும் அமைச்சர்களுக்கும் இப்போது பெரும் பிரச்சினையாக இருக்கிறது.