

விசில் பார்ட்டி அதிகாரத்துக்கு வருவதைத் தடுக்க இலைப் பார்ட்டிக்கு நாம் ஆதரவு கொடுத்தால் என்ன என்ற கேள்வி சூரியக் குடும்பத்தில் எழுந்தபோது அதை பிடிவாதமாக மறுத்தவர் சூரியக் கட்சித் தலைவர் மட்டும்தான் என்பார்கள். அவர் பயந்தது போலவே, கூட்டணியை விட்டு காதும் காதும் வைத்தாற் போல் கழன்று போனவர்கள் எல்லாம் இப்போது அதைத்தான் பெரும் ‘பிழையாக’ தூற்றிக் கொண்டிருக்கிறார்கள்.
இந்த நிலையில், உள்ளுக்குள் இருந்து கொண்டே கருவறுத்த கதர்பார்ட்டிக்கு ‘லெசன்’ படிக்கும் விதமாக மலர் கட்சியுடன் நட்பு பாராட்ட வேண்டும் என்ற யோசனை சூரியக் குடும்பத்தில் எடுத்துவைக்கப்படுகிறதாம்.
எப்போதும் தெற்கு வடக்காய் திரும்பிக் கொண்டு நிற்கும் ‘சின்னவரும்’ அந்தக் குடும்பத்தின் ‘மாப்பிள்ளை சாரும்’ இந்த விஷயத்தில் மட்டும் ஒரே முகமாய் நிற்கிறார்களாம். “கட்சியின் முக்கிய தலைகளுக்கு எதிராக விசில் பார்ட்டி கிளப்பும் ‘விவகாரங்களை’ சமாளிக்க வேண்டுமானால் அதற்கு டெல்லியின் ஆதரவு இருந்தால்தான் கடிவாளம் போடமுடியும்” என்று சீனியர்கள் சிலரும் ‘சிறப்பான’ யோசனை சொல்கிறார்களாம்.
ஏற்கெனவே பொதுச்செயலாளர் பதவிக்கும் செயல்தலைவர் பதவிக்கும் குடும்பத்துக்குள் இருந்தே வரும் அழுத்தங்களை சமாளிக்க முடியாமல் சங்கடத்தில் இருக்கும் தலைவர், இந்த விஷயத்திலும் எந்த முடிவும் எடுக்க முடியாமல் தவிக்கிறாராம்.
இருப்பினும், இப்போதைக்கு மலர் கட்சியை நேரடியாக ஆதரிக்கவும் வேண்டாம் கண்ணை மூடிக் கொண்டு எதிர்க்கவும் வேண்டாம் என்று டெல்லி போக்குவரத்தில் இருக்கும் கழகத்தினருக்கு கண் ஜாடை காட்டி வைத்திருக்கிறாராம். அதேசமயம், “கதர்பார்ட்டிகளை எந்தெந்த ரூட்டில் எல்லாம் கலவரப்படுத்த முடியுமோ அந்தந்த ரூட்டில் எல்லாம் கலவரப்படுத்தி காய்ச்சி எடுங்கள்” என்றும் சிக்னல் கொடுத்திருக்கிறாராம்.