

சூரியக் கட்சியில் தனக்கு சீட் கொடுப்பார்கள் என்று எதிர்பார்த்து அறிவாலயம் வரைக்கும் வந்துபோனவர் ஹனி பீ மாவட்டத்தைச் சேர்ந்த ‘ஜெகமான’ ஒரு சாதி கட்சி தலைவர். ஆனால் போட்டோ ஷூட் எல்லாம் முடிந்ததும், “ஆகட்டும் பார்க்கலாம்” என்று சொல்லி அவருக்கு கைவிரித்துவிட்டது சூரியக் கட்சி தலைமை.
இதையடுத்து, அவரது சாதிய பின்புலத்தையும் ‘சத்தான’ பொருளாதார வளத்தையும் கணக்குப் போட்ட விசில் கட்சியின் தெற்கு மாவட்டச் செயலாளரான ‘லெஃப்ட்’ பிரமுகர், அவரை பனையூருக்கு அழைத்துச் சென்று ’பம்’ தொகுதியில் போட்டியிட சீட்டும் வாங்கிக் கொடுத்தார். அதேபோல், அந்த மாவட்டத்தின் ‘பட்டி’ தொகுதியில் திருவாளர் ‘லெஃப்ட்டும்’ போட்டியிட்டார். ஆனால், ‘ஜெகமானவர்’ ஜெயிக்க, ‘லெஃப்ட்’ கரைசேராமல் போனார்.
இதையடுத்து, ஒட்டுமொத்த மாவட்டத்துக்குமான விசில் பிரதிநிதி தான் தான் என்பது போல் டாம்பீகம் காட்டிய ‘ஜெகமானவர்’, ஆய்வுகள் என்ற பெயரில் சில பல அதிரடிகளை நிகழ்த்தி ரீல்ஸ்களை போட்டுத் தாக்கினார். இன்னமும் அண்ணனின் ஆய்வு அதிரடிகள் நின்றபாடில்லை.
அதேசமயம், அவர் எங்கு சென்றாலும் ‘லெஃப்டுக்கு’ தகவல் தருவதில்லையாம். இதனால் தனது பேரும் புகழும் மங்குகிறதே என ஆதங்கப்பட்ட ‘லெஃப்ட்’, சமயம் பார்த்துக் கொண்டிருந்தார். இந்த நிலையில், ‘ஜெகமானவர்’ தொகுதியில் உள்ள ஒரு தியேட்டரில் ‘ஜனநாயகன்’ முதல் காட்சியை புக் செய்வதில் இரண்டு கோஷ்டிகளுக்கும் இடையே முட்டிக் கொண்டது. ரிலீஸ் நாளில் இது கைகலப்பாக மாறி கார் கண்ணாடியை உடைக்குமளவுக்கு களேபரமானது.
இதனைத் தொடர்ந்து இரு தரப்புமே போலீஸில் புகார் செய்தது. ஆளும் கட்சி கோஷ்டிகளை எப்படி டீல் செய்வது என்று தெரியாமல் சற்றே குழம்பிப் போன போலீஸார், இருதரப்பையும் ஒன்றாக உட்காரவைத்துப் பேசி சமாதானம் செய்து அனுப்பி வைத்திருக்கிறார்கள். இருந்தாலும் இரண்டு தரப்புக்குள்ளும் நீறுபூத்த நெருப்பாக தகித்துக் கொண்டிருக்கிறதாம் உட்கட்சி உரிமைப் பிரச்சினை.