விஜயமானவர் vs மாண்புமிகு ‘மாப்ள’ | உள்குத்து உளவாளி

விஜயமானவர் vs மாண்புமிகு ‘மாப்ள’ | உள்குத்து உளவாளி
Updated on
1 min read

‘ஃபோர்ட்’ மாவட்ட மாண்புமிகுவுக்கும், சமீபத்தில் கட்சி மாறி வந்த அந்த மாவட்ட இலைக் கட்சியின் விஜயமானவருக்கும் பழைய கணக்கு ஒன்று ‘இடிக்கிறதாம்’. மாண்புமிகுவின் தந்தையும் ஒரு காலத்தில் இலைக் கட்சியில் இருந்தவர்தானாம்.

10 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த கூட்டுறவு சங்கத் தேர்தலில் அப்போது ‘பவரில்’ இருந்த விஜயமானவருக்கு கட்டுப்படாமல் தனியாக வேட்புமனு தாக்கல் செய்ய வந்தாராம். ஆனால், குறித்த நேரத்துக்குள் மனுதாக்கல் செய்யவிடாமல் விஜயமானவரின் விசுவாச வட்டம் அவருக்கு ஏகப்பட்ட குறுக்கீடுகள் செய்ததாம்.

இதில் ஏற்பட்ட மோதலில் பட்டியலினத்தைச் சேர்ந்த ஒருவரின் மனுவை கிழித்துப் போட்டதாகச் சொல்லி மாண்புமிகுவின் தந்தை மீது வழக்குப் பதிவு செய்து அவரை உள்ளே தூக்கி வைத்துள்ளனர். அதில் இருந்து மீண்டு வந்த அவர் மீது இன்னும் சில வழக்குகளையும் போட்டு குண்டர் தடுப்புச் சட்டத்தில் மீண்டும் உள்ளே தூக்கி வைத்திருக்கிறார்கள்.

இப்போது வரலாறு திரும்பி இருக்கிறது. அன்றைக்கு குண்டர் சட்டத்தில் உள்ளே தூக்கி வைக்கப்பட்டவரின் மாண்புமிகு மகனிடம் இப்போது “மாப்ள... மாப்ள” என்று மறுகுகிறாராம் விஜயமானவர்.

ஆனால், பழசை மறக்காமல் மனதுக்குள் ஃபிரேம் போட்டு வைத்திருக்கும் அந்த ‘மாப்ளயோ’, ‘வாடி... வா’ என்று போட்டுப் பார்க்கிறாராம். தன்னோடு கட்சி தாவி வந்த சிலருக்கு பொறுப்பு போட வேண்டும் என்று விஜயமானவர் கேட்டதற்கு, “எதுவா இருந்தாலும் மேல பேசிக்கோங்க” என்று கைவிரித்து விட்டாராம் மாண்புமிகு ‘மாப்ள.’ அதேபோல, அரசு வழக்கறிஞர் பொறுப்புக்கு விஜயமானவர் செய்த சில சிபாரிசுகளையும் கண்டும் காணாமல் விட்டுவிட்டாராம்.

விஜயமானவர் vs மாண்புமிகு ‘மாப்ள’ | உள்குத்து உளவாளி
கரப்பான் பூச்சி கட்சியினரின் அடுத்தகட்ட போராட்ட அறிவிப்பை தொடர்ந்து டெல்லியில் துணை ராணுவம் குவிப்பு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in