

‘எங்க ஆட்சியில் ஒரு பைசா லஞ்சம் இல்லை” என்கிறார் முதன்மையானவர். ஆனால், தென் கோடி மாவட்டத்தில் இருக்கும் ‘பொய்கையான’ அதிரடி ஆளும் கட்சி எம்எல்ஏ ஒருவர், ஏரிகளில் சவுடு மண் அள்ளுவதற்கும், கல் குவாரிகளில் ஏற்றப்படும் லோடுகளுக்கும் முந்நூறு முதல் ஆயிரம் ரூபாய் வரைக்கும் ‘கட்டிங்’ கேட்கிறாராம். தானே நேரடியாக கலெக்ஷனுக்குப் போனால் கலவரமாகிவிடும் என்பதால் “நீங்களே வாங்கிக் கொடுத்துடுங்க சார்” என்று அதிகாரிகளுக்கு அட்வைஸ் கொடுத்திருக்கிறாராம்.
தனிப்பட்ட முறையில் கந்துவட்டி தொழிலில் கல்லாக்கட்டும் திருமிகு ‘பொய்கை’யின் சிஷ்யக் கோடிகள் கஞ்சா, குட்கா வியாபாரத்திலும் கொடிகட்டிப் பறக்கிறார்களாம். மலையாள தேசத்தில் ‘குலுக்கல்’ பிசினஸிலும் பிரமாதப்படுத்தும் இவர், அந்தத் தொழிலை வாட்ஸ் அப் குழுக்கள் மூலமாக முத்துநகரிலும் அத்து மீறி நடத்தி அள்ளித் தட்டுவதாகச் சொல்கிறார்கள்.