பனையூருக்கு ஆள் திரட்டும் ‘பொய்கை’ புள்ளி | உள்குத்து உளவாளி

பனையூருக்கு ஆள் திரட்டும் ‘பொய்கை’ புள்ளி | உள்குத்து உளவாளி
Updated on
1 min read

‘கோட்டை’ மாவட்ட இலைக் கட்சி நிர்வாகிகள் பெரும் கூட்டமாக வந்து அண்மையில் ஆளும் கட்சியில் ஐக்கியமானார்கள். அந்த நிகழ்வின் போது, “மெயின் பிக்சர் டெல்டாவில் இருக்கு” என்று முன்னோட்டம் விட்டிருந்தார் ‘விஜயமான’ முன்னாள் மாண்புமிகு. அதற்கான வேலைகள் தற்போது நடந்து கொண்டிருக்கிறதாம்.

பெரியகோயில் மாநகரத்தில் மாநகர் இலைக்கட்சியின் முதன்மைப் புள்ளியாக இருந்தவர் ‘பொய்கைப்’ புள்ளி. கொங்கு மண்டலத்தின் ‘மணியான’ தலைவரின் விசுவாசியான இவர் சட்டமன்றத் தேர்தலில் பெரிய கோயில் ஊர் தொகுதி தனக்குக் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் முன்கூட்டியே வாக்காளர்களுக்கு பரிசுப் பொருட்களை எல்லாம் கொடுத்து அசத்தி வைத்திருந்தார். ஆனால், மணியானவரின் விசுவாசி என்பதாலோ என்னவோ இவருக்கு சீட் கொடுக்காமல் எடக்கானவர் தந்திரமாக தவிர்த்துவிட்டார்.

இந்த நிலையில், விசில் அரசுக்கு இலைக் கட்சி எம்எல்ஏ-க்கள் 25 பேர் ஆதரவளித்த விவகாரத்தில் ‘மணியானவரை’ பதவி நீக்கம் செய்தபோது, ‘பொய்கை’ புள்ளியின் கட்சிப் பதவியையும் பறித்துவிட்டார் எடக்கானவர். அதனால், தனது பண பலம் மற்றும் ஆள் பலத்தை வைத்து இலைக் கட்சி தலைமைக்கு எதிராக பகிரங்கமாகவே இப்போது ஆட்களை திரட்டி வருகிறாராம் ‘பொய்கைப்’ புள்ளி.

கிராமம் கிராமமாக நடக்கும் இந்த ஆள்பிடிப்பு வேலைகள் முடிந்ததும் ‘பொய்கைப்’ புள்ளியும் ஒரு ‘சனிக்கிழமை சங்கம விழாவில்’ விசில் கட்சியில் ஐக்கியமாவார் என்கிறார்கள். இந்த நிகழ்வின்போது கொங்கின் ‘மணியானவர்’ மற்றும் கர்மவீரரின் பெயர் கொண்டவர் உள்ளிட்ட முன்னாள் மாண்புமிகு விஐபி-க்களும் பட்டியலில் இருக்கக் கூடும் என்கிறார்கள்.

பனையூருக்கு ஆள் திரட்டும் ‘பொய்கை’ புள்ளி | உள்குத்து உளவாளி
‘ரீல்ஸ் புகழ்’ மாண்புமிகுவிடம் மாற்றங்கள் | உள்குத்து உளவாளி

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in