

‘சிறுத்தை’ தலைவரின் கருத்துக்கு ‘பரிசு’ கொடுக்கலாம் என்று கலகலப்புடன் கலாய்த்த ‘மலர்ச்சி’ தலைவரை, “இதென்ன பெருசு... நடிகர் திலகத்தை மிஞ்சிய இவரோட நடிப்புக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாமே” என பதிலுக்கு வாரி இருக்கிறார் ‘மலர்ச்சி’ பார்ட்டியில் இருந்து வெந்து நொந்து வெளியேறிய ‘மல்லபுரம்’ தலைவர்.
“அண்மையில் ‘மலர்ச்சி’ தலைவர் நடத்திய போராட்டத்தில் கலந்து கொண்டு கைதானவர்கள் மொத்தமே 117 பேர் தான். அதுதான் இப்போதைக்கு அவரோட ஸ்ட்ரென்த். அப்படி இருக்கையில் ஏற்கெனவே, ‘கட்சி அமைப்பே இல்லாத கட்சிக்கு 8 சீட்’ என தேவை இல்லாமல் ‘சிறுத்தை’களைச் சீண்டினார். அதேபோல் விசில் கூட்டணிக்கு விசிட் அடிக்கும் முன்பே, கதர் கட்சியையும் தேவையில்லாமல் உரசினார்.
அத்தோடில்லாமல், கூட்டணிக்குள் வரும் முன்பாகவே, ‘விசில் தலைவர் எங்கள் எம்எல்ஏ-க்களை ராஜினாமா செய்யச் சொன்னார்’ என்று கொளுத்திப் போட்டு அவரையும் சிக்கலில் இழுத்துவிட்டார். இதையெல்லாம் பார்த்தா, அந்தக் கூட்டணியை அந்தலை சிந்தலையாக்க யாருக்கோ ஸ்லீப்பர் செல்லா நம்மாளு அங்க போயிருப்பாரோன்னு சந்தேகமா இருக்கு.
ஏற்கெனவே, “நாங்க ‘தாமரை’ கட்சியும் ‘மாம்பழ’ கட்சியும் இருக்கிற கூட்டணியில் இருக்க மாட்டோம்’ என்று சொன்ன ‘சிறுத்தை’ தலைவர் இப்ப, ‘மலர்ச்சி’ கட்சி இருந்தா நாங்க இருக்க மாட்டோம்’னு ஒரு குண்டைத் தூக்கிப் போட்டா என்னாகும்? இதையெல்லாம் யோசிச்சுப் பார்த்து விசில் கம்பெனி விஜிலென்டா இருக்கிறது நல்லது” என்று ‘மல்லபுரத்தார்’ மைனூட்டாக எடுத்துக் கோக்கிறாராம்.