

கர்மவீரரின் ரத்த உறவான அந்தப் பெண்மணியை 9 வருடங்களுக்கு முன்னதாக ஆலயக் கட்சியில் ஆர்ப்பாட்டமாய் சேர்த்தார்கள். அத்தோடு அவருக்கு எந்த அங்கீகாரத்தையும் அளிக்காமல் மறந்துவிட்டார்களாம். இதனால் அவர் மிகுந்த வருத்தத்தில் இருக்கிறாராம்.
தனது ஆதங்கத்தை ஆலயக் கட்சியின் ‘போயட்’ புள்ளியிடம் அரசல் புரசலாக தெரிவித்தாராம். அவரும், “அவசரப்பட வேண்டாம்... பொறுமையாக இருங்கள்” என்று சொல்லி அடக்கி வைத்தாராம். இந்த விஷயத்தை எல்லாம் தெரிந்து கொண்ட ஆக்ஷன் ஹீரோ கட்சி சத்தமில்லாமல் கர்மவீரரின் சொந்தத்தை தங்கள் பக்கம் ஈர்க்க பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கிறதாம்.
இதேபோல், ஆர்.கே.நகரில் இலைக்கட்சி தலைவியை எதிர்த்து ஆலயக் கட்சி வேட்பாளராகப் போட்டியிட்ட ‘சிம்லா’ பெண்மணியையும் ஆலயக் கட்சி அத்தோடு மறந்து போனதால் அவர் இலைக் கட்சியில் இணைந்தார்.
ஆனால் துரதிருஷ்டம் என்னவென்றால், திமுக-வின் மூத்த பெண் முன்னாள் அமைச்சரின் மருமகளான அவரை இலைக் கட்சியும் கருவேப்பிலை கணக்காகவே வைத்திருக்கிறதாம். இதையும் அறிந்த ஆக்ஷன் ஹீரோ கட்சியின் தளபதிகள், ‘சிம்லா’வையும் தங்கள் பக்கம் திருப்பும் வேலையில் இறங்கி இருக்கிறார்களாம்.