

சூரியக் கட்சியின் ‘பயில்வோர்’ அமைப்பில் முதன்மைப் பொறுப்பில் இருக்கும் ‘அகிம்சை’ தலைவருக்கு கோட்டைக்குப் போகவேண்டும் என்ற ஆசை அதிவேகமாக தள்ளுகிறதாம்.
முன்பு ‘ஆமைக் கறி’ தலைவரின் கட்சியில் இருந்த போது மக்களவைத் தேர்தலில் செட்டிநாட்டு சீமானை எதிர்த்து சீமைத் தொகுதியில் களம் கண்டவர்.
தனது சொந்த சட்டப் பேரவைத் தொகுதியான ‘ஆடானை’யில் தனக்கென தனிப்பட்ட செல்வாக்கை வளர்த்து வைத்திருக்கும் ‘அகிம்சைத்’ தலைவர், கடந்த மக்களவைத் தேர்தலில் சேதுச் சீமைக்கு சீட் கேட்டு மோதினார்.
ஆனால், கூட்டணித் தோழர்களுக்கு அந்தத் தொகுதி கொடுக்கப்பட்டு விட்டதால் ‘அகிம்சை’யின் ஆசை அப்போது நிறைவேறவில்லை.
அடுத்ததாக, இம்முறை ‘ஆடானை’ தொகுதியில் ஆடிப் பார்க்கலாம் என்ற திட்டத்தில் இருந்தார்.
ஆனால், அதே மாவட்டத்தில் இவரது சமூகத்தைச் சேர்ந்த ‘கண்ணான’ தலைவரும் போட்டியிடுவார் என்பதால் தனக்கான வாய்ப்பைத் தேடி இப்போது கோவை மாவட்டத்துக்கு குடிபெயர்ந்திருக்கிறாராம் ‘அகிம்சை’ அண்ணாச்சி.
கோவையில் அவரது துணைவியார் பணியில் இருக்கிறாராம். அதை வைத்து அங்கு ஜாகை மாறி இருக்கும் இவர், ‘இளவரசின்’ ஆசியுடன் இம்முறை கோவையில் களமிறங்கி அப்படியே கோட்டைக்கு ரூட்பிடிக்கும் திட்டத்தில் இருக்கிறாராம்.