

இலைக் கட்சியில் இருந்து இன்னும் 10 எம்எல்ஏ-க்கள் வரை இழுத்துப் போடும் திட்டத்தில் இருக்கிறதாம் ஆளும் கட்சி. ஜூலை 2-ம் தேதி இது தொடர்பாக மெகா ‘இழுப்பு மேளாவை’ நடத்தவும் தயாராகிறார்களாம். இதில், ஏற்கெனவே ’பேசி முடித்து’ வளைத்து வைத்திருப்பவர்களை தவிர, இலைக் கட்சியின் மாதர் அணியை வழிநடத்திய ‘மதியான’ முன்னாள் மாண்புமிகுவும் இன்னொரு முன்னாள் மாண்புமிகுவான ‘ரிவர் மைந்தரும்’ இழுப்புப் பட்டியலில் இருக்கிறார்களாம். இவர்களோடு சேர்த்து ‘புரம்’ மாவட்டத்தின் புரட்சி ‘முகம்’ தலைவரும் அவரது ஆதரவு பெற்ற ‘ராகமான’ எம் எல்ஏ-வும் இருக்கிறார்களாம்.
அதேபோல் கொங்கு மண்டலத்தின் ‘மணியான’ முன்னாள் மாண்புமிகுவும் தனது ஆதரவாளர்கள் சகிதம் இந்த ‘இழுப்பு மேளாவில்’ இன்முகம் காட்ட இசைந்திருப்பதாகச் சொல்கிறார்கள். இவர்கள் அனைவருமே முடிந்தவரைக்கும் இன்னும் சில எம்எல் ஏ-க்களையும் இலைக் கட்சி பொறுப்பாளர்களையும் ‘பனையூர் பந்திக்கு’ அழைத்துச் செல்ல பம்பரமாய் சுழன்று கொண்டிருக்கிறார்கள். பந்திக்குத் தயாராகும் எம் எல் ஏ-க்கள் இன்று அல்லது நாளை கைப்பட ராஜினாமா கடிதங்களை எழுதிக் கொண்டு சபாநாயகரைத் தேடி வரக்கூடும் என்கிறார்கள்.