

‘ஆண்டாள் குடிகொண்ட பிரசித்திபெற்ற ‘புத்தூர்’ தொகுதியில் இலைக் கட்சியின் சிட்டிங் எம்எல்ஏ-வாக இருந்த ‘ராஜ’ புள்ளிக்கு இம்முறை கட்சி தலைமை சீட் கொடுக்கவில்லை. அதேசமயம், விசில் கட்சியில், அவரது மாப்பிள்ளையான ‘கார்த்திகைப்’ புள்ளிக்கு வாய்ப்புக் கிடைத்து அவர் இப்போது எம்எல்ஏ-வும் ஆகிவிட்டார். தனக்கு சீட் கிடைக்காத வருத்தத்தில் இருந்த ‘ராஜ’ புள்ளியானவர், பொருளாதார ரீதியாக தேர்தலில் மாப்பிள்ளைக்கு கொஞ்சம் உதவி அவரை கைதூக்கி விட்டாராம். அந்த வகையில் மாமா இருந்த சீட்டில் இப்போது மாப்பிள்ளை அமர்ந்திருக்கிறார்.
இதையடுத்து, எங்கிருந்தெல்லாம் ‘வரும்படிகள்’ வரும் என்ற சூத்திரங்களை படித்து வைத்திருக்கும் மாமாவானவர் அங்கெல்லாம் போன் போட்டு, “நம்ம மாப்பிள்ளை தான் இப்ப எம்எல்ஏ. அவருக்கு அரசியல் புதுசு. அதுக்காக அவரை ‘கவனிக்காம’ விட்டுடாதீங்க. நம்ம காலத்துல என்ன சம்பிரதாயம் உண்டோ அதை அப்படியே மாப்பிள்ளைக்கும் செஞ்சுடுங்க” என்று சொல்லி வருகிறாராம்.
இதனிடையே, காண்ட்ராக்டர் ஒருவர், மாப்பிள்ளைக்கு கார் வாங்கிக் கொடுத்திருப்பதாக ஒரு செய்தி ஊரெல்லாம் வட்டமடிக்க ஆரம்பித்தது. இதனால் பதறிப்போன மாப்பிள்ளை, “நான் கார் வாங்குவதற்காக மதுரையில் இருக்கும் கார் ஷோரூமுக்குப் போனது உண்மை தான். ஆனால், எந்தக் காண்ட்ராக்டரும் எனக்கு கார் வாங்கிக் கொடுக்கலங்க” என்று தன்னிலை விளக்கம் கொடுத்துக் கொண்டிருக்கிறாராம்.