

‘அவார்டு நகர்’ மாவட்ட இலைக் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் சிலர் அண்மையில் பனையூர் கட்சியில் சேர்ந்தார்கள். இதில், முன்னாள் ‘சபா’வாக இருந்த ‘முத்தான’வரின் தம்பி முக்கியமானவர். இத்தனைக்கும் இவர் கிழக்கு மாவட்டச் செயல் புள்ளியாக இருந்தவர். கடம்பூர் தலைவருடன் கைகோத்து இவர் பனையூருக்குப் பயணப்பட்டது தெரியாமல், அதே மாவட்டத்தின் இலைக் கட்சியின் முன்னாள் எம்எல்ஏ-க்கள் இருவரும் கூட்டாக பொதிகை எக்ஸ்பிரஸ் ரயிலில் சென்னைக்கு வந்து அங்கிருந்து பனையூருக்குப் புறப்பட்டார்களாம்.
அப்போதுதான், ‘முத்தான’வரின் தம்பி அங்கே முன் வரிசையில் நிற்பது தெரிய வந்திருக்கிறது. உடனே ‘தாவல்’ புரோகிராமை இருவருமே தள்ளிவைத்திருக்கிறார்கள். இந்த இருவரில் பெயருடன் ‘முடக்குக் கலையை’ சேர்த்து வைத்திருக்கும் முன்னாள் எம்எல்ஏ-வானவர், பல காலமாக மாவட்டச் செயலாளர் பதவியை குறிவைத்து காத்திருந்தார்.
இந்த நிலையில், ‘முத்தான’வரின் தம்பி முகாம் மாறிவிட்டதால் அந்தப் பதவியை நமக்கு வாங்கிவிடலாம் என்ற நம்பிக்கையில் பனையூர் பயணத்தை அவர் ஒத்திவைத்தாராம். உடன் சென்ற இன்னொரு முன்னாளுக்கும் அவருக்கும் கொடுக்கல் வாங்கல் ‘பந்தம்’ இருப்பதால் அவரும் மறுப்பேதும் சொல்லாமல் பின்னால் வந்துவிட்டாராம்.
அதற்குள்ளாக, ‘முடக்குக் கலை’ முன்னாள் எம்எல்ஏ-வும் நடிகர் கட்சியில் சேர்ந்துவிட்டதாக செய்திகள் பரவியதால், அப்படியே சென்னை டிரிப்பை சேலத்துக்கு மாற்றிய ‘முடக்குக் கலை’ முக்கியஸ்தர், அங்கு எடக்கானவரைச் சந்தித்து, “நானெல்லாம் சினிமா கவர்ச்சியை நம்பி போகிறவன் இல்லண்ணே” என சிலிர்ப்பு வசனம் பேசிவிட்டு திரும்பினாராம்.
தொடர்ந்து, காலியான கிழக்கு மாவட்டச் செயலாளர் பதவியை பிடிக்க ‘முடக்குக் கலை’யார் முஸ்தீபு காட்ட, “இவங்கள எல்லாம் நம்ப முடியாதுண்ணே” என்று சொல்லி அந்தப் பதவிக்கு தனது சார்பில் 4 பேரை சாய்ஸாக கொடுத்தாராம் மாவட்டத்தின் எகிடுதகிடு எக்ஸ் மாண்புமிகு. அதேசமயம், தேர்தலில் கூட சீட் கேட்டு வராத, என்ஜிஓ புகழ் ‘பாண்டியனாரும்’ எடக்கானவரைச் சந்தித்து இது விஷயமாகப் பேசினாராம்.
ஆனால், இவர்கள் யார் சொல்வதையும் கேட்காத எடக்கானவர், மக்களவைத் தேர்தலில் போட்டியிட ஆள் தேடிக் கொண்டிருந்த தனக்கு ஆபத்பாந்தவனாக கைகொடுத்த திருப்பதி கடவுள் பெயர் கொண்டவரையே கிழக்கு மாவட்ட பொறுப்பில் அமர்த்திவிட்டாராம். அத்துடன், ஆறுதல் பரிசாக ‘பாண்டியனாருக்கு’ அமைப்புச் செயல் பதவியை அள்ளி வழங்கி சமாளித்தாராம். இதனால் இலவு காத்த கிளியாக ஏமாந்து போன ‘முடக்குக் கலையார்’ கடந்த 27-ம் தேதி பனையூர் பார்ட்டியில் ஐக்கியமாகிவிட்டார். இலவச இணைப்பாக அந்த இன்னொரு முன்னாள் எம்எல்ஏ-வும் கூடவே சென்றுவிட்டாராம்.