

‘மலர்ச்சி’ கட்சி எம்எல்ஏ-க்களை ராஜினாமா செய்ய வைக்க அவர்களது மனதை கரையாய் கரைத்துக் கொண்டிருக்கிறார்கள். இதில், ‘சீரான’ தொகுதியில் போட்டியிட்டு வென்ற செந்திலாண்டவரின் பெயர் கொண்டவரை வழிக்கு கொண்டுவர முடியாமல் திண்டாடுகிறதாம் தலைமை.
காரணம், செந்திலாண்டவரின் அம்மா சூரியக் கட்சி தலைவரின் ‘துர்கை’ மனைவிக்கு பள்ளி ஆசிரியராம். அந்த பந்தத்தில்தான் செந்திலாண்டவரை ஜெயிக்க வைக்க, தானே களத்தில் இறங்கி வாக்குச் சேகரிப்பில் எல்லாம் ஈடுபட்டாராம் சூரியத் தலைவரின் ‘துர்கை’ மனைவி.
மேலும், அது தனது சொந்தத் தொகுதி என்பதாலும் தேர்தல் செலவுக்கு கூடுதலாகவே ‘கவனிக்கச்’ சொல்லியும் கட்சி தலைமைக்கு கரிசன கண்டிஷன் போட்டாராம். அம்மணியின் வேண்டுகோள்படியே, அந்தத் தொகுதியில் மேடைப் பிரச்சாரம் மட்டுமல்லாது சாலை வலம் எல்லாம் நடத்தி வாக்குச் சேகரித்தார் சூரியக் கட்சி தலைவர்.
”எனக்காக இவ்வளவெல்லாம் செய்திருக்கையில் அதையெல்லாம் மறந்துவிட்டு எப்படி என்னால் சூரியக் கட்சிக்கு விரோதமாக செயல்பட முடியும்?” என்று கேள்வி எழுப்பும் செந்திலாண்டவர், “ரொம்ப அழுத்துனாங்கனா ‘மலர்ச்சி’ கட்சிக்கு குட்பை சொல்லிருவேன்” என்று தனக்கு நெருக்கமானவர்களிடம் பேசி வருகிறாராம். வானொலியை கண்டுபிடித்தவரின் பெயர் கொண்டவரைத்தான் இந்தத் தொகுதியில் தங்களது தூணாக நம்பி இருந்தது ‘மலர்ச்சி’ கட்சி.
ஆனால் காலம் முழுவதும் காசை செலவழித்து களைத்துப்போன அவர், அதற்கான அங்கீகாரம் கிடைக்காத ஏமாற்றத்தில் இலைக் கட்சியில் ஐக்கியமாகிவிட்டார். அவரை தக்கவைக்க ‘மலர்ச்சி’ கட்சித் தலைவர் மணிக்கணக்கில் உட்கார்ந்து பேசியும் பலனில்லாமல் போய்விட்டது. அவருக்கு பாடம் புகட்டவே, இம்முறை செந்திலாண்டவரை களத்துக்குக் கொண்டு வந்தாராம் ‘மலர்ச்சி’ தலைவர். ஆனால், அவரும் இப்போது தன்னுடன் ‘டக் ஆஃப் வார்’ நடத்திக் கொண்டிருப்பதால் மூக்கை விடைக்கிறாராம் முதிர்ச்சியான ‘மலர்ச்சி’ தலைவர்.