

‘குறிச்சி’ மாவட்ட இலைக் கட்சியில் இருந்து கூட்டம் கூட்டமாக விசில் கட்சிக்கு ஜாகை மாறத் தயாராகி வருகிறார்களாம். இவர்கள் அத்தனை பேருமே மாவட்டத்தின் ‘குருவான’ செயல்புள்ளி மீது பழிபோட்டுத்தான் கட்சி மாறுகிறார்களாம். முதல் ஆளாக, ‘புரம்’ தொகுதியின் எம்எல்ஏ-வானவர் கடந்த வாரத்தில் செயல்புள்ளி மீது பாய்ந்தார்.
அடுத்ததாக ‘முருகாயுதத்தை’ தன்பெயருக்கு பின்னொட்டாக வைத்திருக்கும் ஒன்றியச் செயலாளர், “குறுநில மன்னர் போல் செயல்படுகிறார்” என்று செயல்புள்ளிக்கு எதிராக குற்றச்சாட்டுகளை செதுக்கிவிட்டு அண்மையில் கட்சியில் இருந்து விலகினார்.
எடக்கானவருக்கு நெருக்கமான வட்டத்தில் இருப்பது யார் என்பதில் மாம்பழப் புகழ் ஊரின் சிலப்பதிகாரப் புள்ளிக்கும் ‘குருவான’ செயல்புள்ளிக்கும் கடும்போட்டியாம்.
அந்தப் போட்டியில், திருவாளர் ‘சிலப்பதிகாரம்’ தான் குறிச்சி மாவட்ட இலைக் கட்சியை இஷ்டத்துக்கு கலைத்து ஆடி எங்கள் ‘மாவட்டத்தின்’ செல்வாக்கை சரிக்கும் சதிலீலாவதி வேலைகளைச் செய்வதாக ‘குருவானவர்’ தரப்பு குற்றப்பத்திரிகை வாசிக்கிறது.