

அண்டை மாநில கதர் பார்ட்டிக்கு புதிய தலைவரை நியமித்தபோதே, தமிழக தலைவர் மாற்றம் குறித்தும் பேச்சு வந்ததாம். ஆனால், டெல்லியில் தன்னை ஆதரிக்கும் தலைவரிடம் முன்கூட்டியே பேசிய ‘செல்வ’ தலைவர், ‘‘இத்தனை நாள் பதவியில் இருந்துவிட்டேன். எனது மகளுக்கு திருமணம் வைத்திருக்கிறேன். 18-ம் தேதி திருமணம். அந்த சுபநிகழ்ச்சியை நல்லபடியாக நடத்தி முடிச்சுக்கிறேன். அதுவரைக்கும் என்னை தலைவர் பதவியில் தொடர அனுமதியுங்கள்’’ என்று கேட்டுக் கொண்டாராம். அதனால், தலைவர் மாற்றம் தள்ளிவைக்கப்பட்டுள்ளதாம்.
இதற்கிடையே, அடுத்ததாக மாநிலத் தலைவராகும் வாய்ப்பு ‘ஜெம்மானவருக்கு’ அமையலாம் என்கிறார்கள். ஆனால், இரண்டு பேரைத் தவிர தமிழக கதர் பார்ட்டிக்கு மாநிலத் தலைவராக இருந்தவர்களின் அரசியல் வாழ்க்கை அத்தோடு அஸ்தமித்துவிட்ட வரலாற்றை திரும்பிப் பார்த்து, தலைவர் பதவியை ஏற்கும் விஷயத்தில் இரு மனதாய் இருக்கிறாராம் ‘ஜெம்’.
இந்த சூழலில், ‘ஜெம்’ தலைவர் கைகாட்டுபவருக்கு தலைவர் சான்ஸ் அடிக்கலாம் என்று செய்திகள் வருவதால் அவரைச் சுற்றி ஆதரவாளர்கள் வட்டம் விரிவடைந்து கொண்டே வருகிறதாம். அந்த கூட்டத்தோடு கூட்டமாய் தங்களுக்கும் ஏதாவது நல்ல வழியைக் காட்டிவிட மாட்டாரா என ஏக்கத்துடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் கதர் பார்ட்டியின் இரண்டு ‘மாண்புமிகுக்களும்’ அண்மையில் ‘ஜெம்மானவர்’ பிறந்தநாளுக்கு அவரது வீட்டுக்கே சென்று பிறந்தநாள் கேக் சாப்பிட்டுவிட்டு வந்தார்களாம்.