

“வெற்றிக் களிப்பில் தொகுதிப் பக்கம் எந்த ஆர்ப்பாட்டமும் செய்து பொதுமக்களுக்கு சிறு இடைஞ்சலும் ஏற்படுத்தக் கூடாது” என விசில் கட்சி எம்எல்ஏ-க்களுக்கு கண்டிப்பான உத்தரவு போட்டிருக்கிறதாம் தலைமை. குறிப்பாக, மாண்புமிகு மக்களுக்கு இதை அழுத்திச் சொல்லி இருக்கிறார்களாம்.
இந்த நிலையில், கடந்த 14-ம் தேதி, மாண்புமிகுக்குள் சிலர் தங்களது தொகுதிக்கு திரும்பினார்கள். தலைமையின் கண்டிஷன் தெரியாமல், தென் மாவட்ட ‘ராஜ’ மாண்புமிகு ஒருவரை வரவேற்க மாவட்ட எல்லையான பெருமாள் பள்ளி கொண்டிருக்கும் ‘கோட்டை’ வாசலுக்கு மாலையும் கையுமாய் வந்துவிடுவதாக அவரது விசுவாசிகள் போன் போட்டுச் சொன்னார்களாம்.
பதறிப்போன மாண்புமிகு, “ஐயா... சாமிகளா அப்படி ஏதும் வந்துடாதீங்க. அப்படியே நீங்க அங்க வந்து நின்னாலும் காரை நிறுத்த மாட்டேன். நான் பாட்டுக்கு போயிட்டே இருப்பேன். எனக்கு வரவேற்பு கொடுக்கணும்னு நினைக்கிறவங்க எல்லாரும் நம்ம ஊருல இருக்கிற மூன்றெழுத்து மண்டபத்துக்கு வந்துருங்க. அங்க நம்ம எல்லாரும் சந்திக்கலாம்” என்று சொல்லிவிட்டாராம்.
அப்படியும் சிலர் விடாமல், “அமைச்சரை அழைச்சுட்டு வர ஏர்போர்ட்டுக்கு போகலையாண்ணே” என்று மாண்மிகுவின் அப்பாவிடம் நைஸாகக் கேட்டார்களாம். அதற்கு, “அதெல்லாம் என்னத்துக்கு... தம்பிக்கு எஸ்கார்டு இருக்கு அவங்க அழைச்சுட்டு வந்திடுவாங்க” என்று அழகாய் சொல்லிவிட்டாராம் அப்பா.