

விசில் கட்சியின் மாண்புமிகுவாகி இருக்கும் ‘கீர்த்தனமானவர்’ நாயுடு சமூகத்தின் பிரதிநிதியாக சுயேச்சையாக களமிறங்கவே காய் நகர்த்தி வந்தாராம். ‘அவார்டு’ நகர் மாவட்டத்தில் இலைக் கட்சி கூட்டணி நாயுடு மற்றும் நாடார் சமூகத்தினருக்கு வாய்ப்பளிக்காமல் ஒட்டுமொத்தமாக புறக்கணித்ததால் நாயுடு சமூக அமைப்புகள் ‘கீர்த்தமானவரை’ ஆதரிக்க அணி திரண்டன.
இதற்காக அவருக்கு சங்கத்தின் இளைஞரணி பொறுப்பும் கொடுத்து அவரை ‘அவார்டு’ நகர் தொகுதியிலேயே நிறுத்த ஆயத்தமானார்கள். இது தொடர்பாக சோஷியல் மீடியா மற்றும் யூடியூப் சேனல்களில் பிரமாதமாக பேட்டியும் கொடுத்து அசத்திய ‘கீர்த்தனம்’, கிராமம் கிராமமாகச் சென்று தனது சமுதாய மக்களிடம் ஆதரவும் திரட்ட ஆரம்பித்துவிட்டாராம்.
இந்த நிலையில் தான் கட்சியில் சேர்ந்த மறுநாளே, ‘அவார்டு’ நகரை விட்டுவிட்டு ‘பட்டாசு’ நகரில் அவருக்கு சீட்டை ஒதுக்கியது விசில் பார்ட்டி. ‘கீர்த்தனம்’ ஏற்கெனவே ‘பிஹார்’ கிஷோரின் ‘பேக்’ கம்பனியில் வேலை பார்த்தவராம். 2021 தேர்தலில் இவரும் இவரது சகாக்களும் சூரியக் கட்சிக்காக ‘வியூக’ வேலை பார்த்திருக்கிறார்கள். அண்டை மாநிலத்து நாயுடுவுக்கும், பிஹார் தேர்தலிலும் களப்பணி செய்தவராம் ‘கீர்த்தனம்’. சேனல் பேட்டியில் மோடி புகழ் பாடியதும் அந்த ‘தோஷத்தில்’ தானாம்.
வியூகப் பணியில் இருந்த போது விசில் கட்சியின் மாண்புமிகு ‘மாப்பிள்ளைக்கு’ நன்கு பரிச்சயமாகி இருந்தாராம் ‘கீர்த்தனம்’. அவரது சிபாரிசிலேயே தேர்தலில் போட்டியிட்டு இப்போது ‘மாண்புமிகு’ வட்டத்துக்குள்ளும் என்ட்ரி ஆகிவிட்டார் கில்லாடி ‘கீர்த்தனம்’.