

‘அவார்டு நகர்’ மாவட்டத்தில் இலைக் கட்சியின் முன்னாள் எம்எல் ஏ-வான ‘வர்ம’ மனிதர் இம்முறை தனது சொந்தத் தொகுதியில் களமிறங்கத்தான் கடந்த ஒரு வருட காலமாக களத்தை தயார்படுத்தி வைத்திருந்தாராம். ஆனால், அங்கே அவரை நிறுத்தினால் ஜெயித்தாலும் ஜெயித்து வந்துவிடுவார் என பதறிய இலைக் கட்சியின் முன்னாள் ‘அதிரடி’ மாண்புமிகு சமயம் பார்த்து ‘வர்மக்காரரின்’ தொகுதியை லோட்டஸ் கட்சி தலைவருக்கு ஒதுக்கவைத்து விட்டாராம்.
இதனால் வேறு வழியில்லாமல் சூரியக் கட்சியின் ‘கோல்டு’ மாண்புமிகு போட்டியிடும் ‘சுழி’ தொகுதியை ‘வர்மக்காரருக்கு’ ஒதுக்கினாராம் எடக்கானவர். இப்படியொரு மூவ் நடப்பதுமே, ‘சுழி’ தொகுதி இலைக் கட்சி நிர்வாகிகள், “தொகுதியை கூட்டணிக்குக் கூட கொடுத்துவிடுங்கள்.
வெளியூர்க்காரரை இங்கு நிறுத்தாதீர்கள்” என்று கொடி பிடித்தார்கள். இதைப் புரிந்து கொண்ட ‘வர்மக்காரர்’, “இந்தத் தொகுதியை நான் கேட்கவே இல்லை. தலைமை தான் எனக்கு ஒதுக்கிவிட்டது” என வேண்டா வெறுப்பாக பேசினார். இந்த நிலையில், வீட்டுக்கு வீடு கொஞ்சம் காசு செலவழித்தால் தான் முட்டி மோதிப் பார்க்கலாம் என்று நிர்வாகிகள் யோசனை சொன்னதை அடுத்து, தனக்கு தெரிந்த நட்பு வட்டாரத்தில் இரண்டு பேரிடம் கடனாக கொஞ்சம் பணம் கேட்டாராம் ‘வர்மக்காரர்’.
இந்த விஷயம் ‘கோல்டு’ மாண்புமிகுவின் காதுக்குப் போனதை அடுத்து, “எதுக்கு கடனெல்லாம் வாங்கிட்டு இருக்கீங்க... நீங்கள் ஓட்டுக்கு காசு கொடுத்தாலும் சிரமம் தான். அதுக்குப் பதிலா, கொஞ்சம் ‘சைலண்டா’ இருங்க. எலெக் ஷன் முடிஞ்சதும் ‘பாத்து பண்ணிக்கலாம்’ ” என்று யோசனை சொன்னாராம் மிஸ்டர் ‘கோல்டு’. இந்த கான்வர்சேஷனுக்குப் பிறகு ‘வர்மக்காரர்’ தனது வேகத்தைக் வெகுவாக குறைத்துக் கொண்டுவிட்டதாக தகவல்.