

‘கோட்டை’ மாவட்டத்தின் தலைநகரில் நியோ டைடல் பார்க் அமைக்கப்படும் என கடந்த மாதம் அங்கு சென்றிருந்த முதன்மையானவர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். வெறும் அறிவிப்பு தான் வந்திருக்கிறது. இதற்கே, இந்தத் திட்டத்தைக் கொண்டு வந்தது நான் தான் என அங்கிருக்கும் ஆலயக் கட்சி பிரபலங்கள் இரண்டு பேர் சமூக வலைதளத்தில் வாள் வீசிக் கொண்டிருக்கிறார்கள்.
பஞ்சாயத்தை முதலில் ஆரம்பித்து வைத்தவர் ஆலயக் கட்சியின் அயலக பிரதிநிதி தானாம். ‘முதல்வர், அமைச்சர்கள், அதிகாரிகளைச் சந்தித்து பேசியதுடன், கருத்துக் கேட்புக் கூட்டமும் நடத்தி இத்திட்டத்தைக் கொண்டு வந்தது நான்தான்’ என அயலகப் பார்ட்டி முகநூலில் பட்டியல் போட்டு அனைவருக்கும் நன்றி நவின்றார்.
இதைப் பார்த்துவிட்டுப் பதறிய, மாவட்டத் தலைநகரின் ‘முத்தான’ மக்கள் பிரதிநிதியானவர், ‘நான் தான் மன்றத்தில் பேசி முதல்வரின் கவனத்தை ஈர்த்தேன். அதனால் தான் இந்தத் திட்டம் நம்ம ஊருக்கு வந்தது’ என தன் பங்கிற்கு முகநூலில் பட்டியல் போட்டு நன்றி சொன்னார். இன்னும் ஒரு ‘செங்கல்’ கூட எடுத்துவைக்கப்படாத இந்தத் திட்டத்துக்காக இரண்டு பேர் இப்படி சொந்தம் கொண்டாடுவதன் பின்னணியில் ‘கோட்டை’ கனவு இருக்கிறதாம்.
‘முத்தான’ மக்கள் பிரநிதியானவர் தனக்கே மீண்டும் ‘கோட்டை’ தொகுதி கைக்கு வரும் என கணக்குப் போடுகிறாராம். ஆனால், ‘மைனாரிட்டி’ கோட்டாவில் ‘கோட்டை’யை இம்முறை தனக்குக் கைப்பற்ற துடிக்கிறாராம் ‘அயலகப் பார்ட்டி’ அதனால் தான் இத்தனை அடிதடியாம்.