

மதுரை: நிச்சயமாக சட்டப்படி திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றுவோம். காத்திருந்து காத்திருந்து கால் வலித்தது தான் மிச்சம் என்று உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்குத் தொடர்ந்த ராம ரவிக்குமார் புதன்கிழமை இரவு தெரிவித்தார். அவர் கூறியதாவது:
“திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றப்பட வேண்டும் என 2 நாட்களுக்கு முன்பு சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. ஆனால் அந்த உத்தரவினை கோவில் நிர்வாகமும், மாநகர காவல் துறையும் நிறைவேற்றவில்லை.
144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் மத்திய தொழில் பாதுகாப்பு படை வந்தாலும் அவர்களையும் கைது செய்து விடுவோம் என கூறுகிறார்கள். இந்த நாட்டில் இந்துக்களுக்கு வழிபாட்டு உரிமைகள் இல்லை. நீதிமன்ற உத்தரவை அரசு நிறைவேற்ற மறுக்கிறது.
இங்குள்ள இஸ்லாமியர்களுக்கும் எங்களுக்கும் எந்த பிரச்சினையும் கிடையாது. அரசுக்கு தான் பிரச்சினை இருக்கிறது. வாக்கு அரசியலுக்காக நீதிமன்ற உத்தரவை அரசு அவமதித்துள்ளது. சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு விட்டதால் இந்துகள் மழையில் தீபம் ஏற்ற முடியவில்லை. எங்களையும் மத்திய தொழில் பாதுகாப்பு படை அதிகாரிகளையும் கைது செய்து விடுவோம் என கூறுகிறார்கள். இது திட்டமிட்ட சதி. இதனை சட்டத்தின் படி மீண்டும் எதிர்கொள்வோம்.
நிச்சயமாக சட்டத்தின்படி மலை உச்சியில் தீபம் ஏற்றுவோம். காத்திருந்து காத்திருந்து கால் வலித்தது தான் மிச்சம் என்று அவர் தெரிவித்தார். அப்போது அவரது வழக்கறிஞர் அருண் சுவாமிநாதன் ஆகியோர் உடனிருந்தனர்.
தேர்தல் மூலம் மக்கள் பதிலடி கொடுப்பார்கள்: திருப்பரங்குன்றம் பகுதியில் இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வர சுப்ரமணியம் நிருபர்களிடம் கூறியதாவது:
“இந்துக்கள் மீது இவ்வளவு வெறுப்பு ஏன் என்பது தெரியவில்லை. 2026 தேர்தலில் இந்த அரசு படுதோல்வி அடையும். திமுக அரசின் சரித்திரத்தில் இடம் பெறும் வகையில் அவர்களுக்கு படுதோல்வியை அளிக்க வேண்டும். இந்துக்கள் அனைவரும் சேர்ந்து திமுகவிற்கு தேர்தல் மூலம் தக்க பதிலடி கொடுப்பார்கள் என நம்புகிறோம்.
இந்துக்கள் மத்தியில் இது பெரிய மன வேதனையாக இருக்கிறது. இதற்கு தமிழக அரசு பதில் சொல்லி ஆக வேண்டும். இதற்கு முருகன் நிச்சயம் தண்டனை கொடுப்பார். அவர்களுக்கு நல்ல புத்தியை கொடுக்க வேண்டும் என முருகனை வேண்டிக் கொள்கிறோம். 2026 தேர்தலில் இந்த அரசு படுதோல்வியை சந்திக்கும்.
தீபமேற்றினால் கலவரம் வந்துவிடும் என கூறிய மதுரை எம்.பி. நக்சலைட்டை சேர்ந்தவர். அரசு சரியாக நடந்து கொள்ள வேண்டும். ஆனால், ஒரு சாராராக அரசு நடந்து கொள்கிறது. அடுத்த கட்டம் என்ன செய்வது என்பது குறித்து நிர்வாகக் குழு கூட்டம் கூடி முடிவு செய்யப்படும். திமுக-வின் அரசியல் லாபத்துக்காக பல்லாயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்து விரோத ஆட்சி தமிழகத்தில் நடந்து கொண்டிருக்கிறது. முருகரை அவமதிப்பதற்கு இந்த சமய அறநிலையத்துறையும் உதவி புரிகிறது. ஆனால், அவர்களை குறை கூற முடியாது. மேலிருந்து எந்த உத்தரவு வருகிறதோ அதைத்தான் அவர்களால் நிறைவேற்ற முடியும். முருகருக்கு விரோதமாக நடந்தது இந்த அரசாங்கம். பல நூறு ஆண்டுகளாக தீபம் ஏற்றப்பட்டு இருக்கிறது. சட்ட ரீதியாக தீபம் ஏற்றுவதற்கு அனுமதி வாங்கி இருந்தும் அனுமதி மறுத்தது ஏற்புடையதல்ல” என்றார்.