கதர் கட்சி வேட்பாளர் வேட்டை ‘டீல்’ | உள்குத்து உளவாளி

கதர் கட்சி வேட்பாளர் வேட்டை ‘டீல்’ | உள்குத்து உளவாளி
Updated on
1 min read

கதர் கட்சியில் ‘திடீர் வேட்பாளராக’ முளைத்தவர் குறித்து தினுசு தினுசாக செய்திகள் வெளிவர ஆரம்பித்திருக்கின்றன. திடீர் வேட்பாளரை கதர் பட்டியலுக்குள் கோத்துவிட்டத்தில் சூரியக் கட்சி சொல்லிக் கொடுத்த சூத்திரமும் இருக்கிறதாம். இருந்தாலும் இந்தப் பிரச்சினையில், கதர் பார்ட்டியின் முக்கியத் தளபதியானவர் தனிப்பட்ட முறையில் ‘5 சி’ வரைக்கும் ‘அன்பளிப்பாக’ பெற்றுக் கொண்டாராம்.

திடீர் வேட்பாளரிடம் மட்டுமல்லாது இன்னும் ஒரு சிலரிடமும் தகுதிக்கேற்ப ‘அன்பளிப்புகளை’ அளந்து வாங்கி இருக்கிறாராம் முக்கியத் தளபதி. இவரும் கட்சியின் பேரவைத் தளபதியும் ஒருவருக்கொருவர் பிடிக்காதவர்கள் போல் வெளியில் காட்டிக் கொண்டாலும் ‘வேட்பாளர் வேட்டையில்’ இருவரும் டீல் போட்டு ஆளுக்கொரு பக்கம் அளந்து கட்டிவிட்டார்களாம்.

வெளியே தெரியாமல் கமுக்கமாக நடந்த இந்த ‘வேட்டை’ சமாச்சாரங்கள் ‘திடீர் வேட்பாளர்’ விஷயத்தில் வெளிச்சத்துக்கு வந்துவிட்டதாம். ‘மாங்கனி’ கட்சி இளைய தலைவரின் மைத்துனரும் கதர் பார்ட்டியில் டெல்லி பிரதிநிதியாக இருக்கிறார். அவர் தான் பட்டியலில் மச்சானுக்குப் பிடிக்காத ‘திடீர் மாப்பிள்ளை’யின் பெயரும் இருப்பதை கண்டுபிடித்து மற்ற விஷயங்களையும் துருவி எடுத்தாராம். இந்த சமாச்சாரங்கள் அனைத்தையும் டெல்லி தலைமையின் கவனத்துக்கு கொண்டு போனதில் அவரது பங்கும் இருக்கிறதாம்.

இது தொடர்பாக, பார்ட்டியின் முக்கியத் தளபதியிடம் ‘முறையாக’ விசாரணை நடத்திய கட்சித் தலைமை, அப்போதே அவரிடம் ‘பொறுப்பைத் துறக்கும்’ கடிதத்தை எழுதி வாங்கிக் கொண்டுதான் அனுப்பினார்களாம். இந்த நிலையில் தான், “திருவிழா முடிந்ததும் நானே வீட்டுக்குப் போயிருவேன்” என்ற கணக்காய் ‘பெருந்தன்மையாக’ வான்டடாக வந்து வாக்குமூலம் கொடுத்திருக்கிறாராம் முக்கியத் தளபதி.

கதர் கட்சி வேட்பாளர் வேட்டை ‘டீல்’ | உள்குத்து உளவாளி
‘லாட்டரி மாப்பிள்ளை’யை வீழ்த்த திட்டம் | உள்குத்து உளவாளி

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in