

சேதுச் சீமையின் இளைய மன்னர் தற்போது மலர் கட்சியின் யூத் விங்கில் பொதுச் செயலாளராக இருக்கிறார். ‘சங்கப்’ பின்னணியில் இருந்து வந்த இவரும் இம்முறை தேர்தல் களத்துக்கு வரலாம் என்கிறார்கள். ‘சங்கத்தில்’ இருந்து வந்தவர்களுக்கும் இம்முறை கணிசமான இடங்களை விட்டுக் கொடுக்க வேண்டும் என ’சங்கத்’ தலைமை மாநில மலர்க் கட்சி தலைமைக்கு வலியுறுத்திச் சொல்லி இருக்கிறதாம்.
இந்த பின்னணியிலேயே சேது சமஸ்தானத்தின் இளைய பட்டமும் தேர்தல் களத்துக்கு வர மெனக்கிடுகிறாராம். சொந்த மாவட்டத்தில் உள்ள ‘குளத்தூர்’ தொகுதி தான் இளைய மன்னருக்கு இஷ்டமான சாய்ஸாம்.
ஆனால், தற்போது ‘குளத்தூர்’ தொகுதியைக் தன் வசம் வைத்திருக்கும் ‘கண்ணான’ மாண்புமிகுவை எதிர்த்து களமிறங்க இலைக் கட்சி தரப்பில் அந்தத் தொகுதியின் முன்னாள் கதர் பார்ட்டி எம்எல்ஏ-வான ‘பாண்டியமான’ கல்வித் தந்தை காசு பணத்தை கட்டிவைத்துக் கொண்டு காத்திருக்கிறாராம்.
இந்த உத்தரவாதத்துடன் தான் அவர் இலைக் கட்சியில் இணைந்தாராம். இப்படியொரு திட்டம் இருப்பதால் பக்கத்தில் உள்ள ‘அவார்டு’ மாவட்டத்தின் ‘சுழி’ தொகுதியையும் குறிவைக்கிறதாம் சமஸ்தான வாரிசு.
ஆனால், ‘சுழி’ தொகுதி உதயமான நாள் முதலே அந்தத் தொகுதியை தன் வசப்படுத்தி வரும் ‘கோல்டு’ மாண்புமிகுவிடம் சேது சமஸ்தானத்தின் செல்வாக்கு எடுபடுமா என்றுதான் தெரியவில்லை.