

நடிகர் கட்சியை தங்கள் கூட்டணிக்கு வரச் சொல்லி தாம்பூலம் வைத்த ‘பிரசாத’ தலைவரை தடாலடியாக கட்சிப் பொறுப்பில் இருந்து கடாசி இருக்கிறது காவிக் கட்சி. இதன் பின்னணியில் விவகாரமான பல விஷயங்கள் ஓடுகிறதாம்.
‘மவுன்ட்’ தலைவர் காவிக் கட்சிக்கு தலைவராக இருந்த போது, ‘பிரசாத’ தலைவர் உள்ளிட்ட சிலரின் அஜால் குஜால் வேலைகளைக் கண்டுபிடித்து அவர்களை எல்லாம் கொஞ்சம் ஒதுக்கி வைத்தார். ‘பிரசாத’ தலைவருக்கு கட்சியின் ‘மியூசிக்’ தலைவியின் அருளாசி உண்டு என்பதால், ஒதுக்கப்பட்ட பிறகு பெரும்பாலும் பக்கத்து மாநிலத்திலேயே பகுமானமாக பதுங்கி இருந்தாராம்.
‘மவுன்ட்’ தலைவர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டதும் மீண்டும் உள்ளே வந்த மிஸ்டர் ‘பிரசாதம்’, தனது இஷ்டத்துக்கு அறிக்கைகளை அள்ளிவிட்டு லைம் லைட்டுக்கு வந்தார். அதேசமயம், ‘மவுன்ட்’ தலைவரால் ஏற்கெனவே மீடியா பிரிவுக்கு பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட ‘ரங்கமானவர்’ இதனால் தனக்கு ஏற்படும் சங்கடங்கள் குறித்து தலைமைக்கு தனது ஆதங்கத்தைத் தெரிவித்தாராம்.
இதனிடையே, நடிகை குறித்து தெரிவித்த கருத்துக்காக காவிக் கட்சி தலைவர் வருத்தம் தெரிவித்த சம்பவத்திலும், “இதுக்கு எதுக்கு வருத்தம் தெரிவிக்கோணும்...” என்ற தொனியில் காவிக் கட்சி தலைவருக்கு வக்காலத்து வாங்குவது போல் கருத்து பதிவிவிட்டிருந்தாராம் ‘பிரசாத’ தலைவர்.
இந்த சமாச்சாரங்கள் அனைத்தும் ஒன்று சேர்ந்து ‘பிரசாத’ தலைவரின் கட்சிப் பொறுப்பைக் காவு வாங்கிவிட்டதாகச் சொல்கிறார்கள். ஆக, ‘மவுன்ட்’ தலைவர் காவிக் கட்சிக்குள் இன்னமும் காரம் குறையாமல் தான் இருக்கிறார் போலிருக்கிறது.