பொங்கல் கொண்டாட்டத்தில் நடனமாடிய காவலர்களை இடமாற்றம் செய்து பிறப்பித்த உத்தரவு ரத்து

பல்லாவரம், குரோம்பேட்டை காவல் நிலைய நிகழ்வு
பொங்கல் கொண்டாட்டத்தில் நடனமாடிய காவலர்களை இடமாற்றம் செய்து பிறப்பித்த உத்தரவு ரத்து
Updated on
1 min read

காவல் நிலையத்தில் பொங்கல் கொண்டாட்டத்தின்போது நடனமாடிய உதவி ஆய்வாளர்கள், காவலர்களை இடமாற்றம் செய்து காவல் ஆணையர் அமல்ராஜ் பிறப்பித்த உத்தரவு, கடும் எதிர்ப்பு காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பொங்கல் திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்ட நிலையில், காவல் நிலையங்களிலும் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. அந்த வகையில் தாம்பரம் மாநகர காவல் ஆணையரகத்தில் ஜன.13ம் தேதி மாடம்பாக்கத்தை அடுத்த பதுவஞ்சேரியில் உள்ள ஆயுதப்படை வளாகத்தில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இதில் காவல் ஆணையர் அமல்ராஜ் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இந்நிலையில் பல்லாவரம், குரோம்பேட்டை காவல் நிலையங்களில் நடந்த பொங்கல் கொண்டாட்டத்தில் போலீஸார் நடனம் ஆடிய வீடியோ இன்ஸ்டா கிராமில் பரவியது. இதையடுத்து 2 காவல் நிலையங்களின் சட்டம் ஒழுங்கு ஆய்வாளர்கள் பழனிவேல், தயாள், 5 உதவி ஆய்வாளர்கள் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டனர். அதேபோல், 20 போலீஸார் ஆயுதப் படைக்கு மாற்றப்பட்டனர்.

பொங்கல் கொண்டாட்டத்தில் நடனம் ஆடியதற்காக ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள், போலீஸார் என ஒட்டு மொத்தமாக மாற்றப்பட்டதற்கு காவல் துறையினர் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்தது. மேலும் பாதிக்கப்பட்டவர்கள் ஆணையரை நேரில் சந்தித்து வருத்தம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. தாம்பரம் மாநகர காவல் ஆணையர் அமல்ராஜின் இந்த நடவடிக்கைக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் எதிர்ப்பு எழுந்தது. இதையடுத்து, 2 ஆய்வாளர்கள் தவிர, மற்ற அனைவரும் நேற்று பழைய பணிக்கே திருப்பி அனுப்பப்பட்டனர்.

பொங்கல் கொண்டாட்டத்தில் நடனம் ஆடிய போலீஸார் மீது வேகமாக நடவடிக்கை எடுத்த ஆணையர், அதிகரித்து வரும் குற்ற செயல்களை கட்டுப்படுத்தவும், கட்டப் பஞ்சாயத்து செய்யும் போலீஸார் மீதும் நடவடிக்கை எடுக்கவும் தீவிரம் காட்ட வேண்டும் என்பது, சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாகும்.

காவல் ஆணையர் நடவடிக்கைக்கு பாஜக கண்டனம்: பல்லாவரம் மற்றும் குரோம்பேட்டை காவல் நிலையங்களில் பொங்கல் கொண்டாடிய அதிகாரிகளைப் பணியிட மாற்றம் செய்தது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. சமத்துவ பொங்கல் என முழங்குபவர்களுக்குக் காவல் துறையினர் மனிதர்களாகத் தெரியவில்லையா? அவர்களை ஏவலாளிகளாகக் கருதும் ஆதிக்க மனப்பான்மையைக் கைவிட்டு, இடமாற்றத்தை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என பாஜக தலைமை செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி கண்டனம் தெரிவித்துள்ளார்.

பொங்கல் கொண்டாட்டத்தில் நடனமாடிய காவலர்களை இடமாற்றம் செய்து பிறப்பித்த உத்தரவு ரத்து
ஆந்திர அதிகாரியின் வாட்ஸ்அப்பில் வெளியான ஆபாச படங்கள்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in