

சித்தூர்: ஆந்திர அரசின் சித்தூர் மாவட்ட மக்கள் தொடர்பு இணை இயக்குநராக பணியாற்றி வருபவர் வேலாயுதம். இவர் பல வாட்ஸ்அப் குழுக்களுக்கு அட்மினாக உள்ளார். சித்தூர் மாவட்டம் மற்றும் மாநில அரசு தொடர்பான செய்திகள், படங்களை இக்குழுக்களில் இவர் பதிவிடுவார்.
இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன் இவரது எண்ணில் இருந்து பல குழுக்களுக்கு ஆபாச படங்கள் மற்றும் வீடியோக்கள் தொடர்ச்சியாக வந்தன. இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த சிலர் அதிகாரி வேலாயுதத்துக்கு போன் செய்து கேட்டனர். உடனே அந்த ஆபாச படங்கள் மற்றும் வீடியோக்கள் அழிக்கப்பட்டன.
இதுகுறித்து அதிகாரி வேலாயுதம், சித்தூர் சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து சித்தூர் சைபர் கிரைம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.