

கோப்புப் படம்
கடந்த மக்களவைத் தேர்தலில் நெல்லையில் பாஜக வேட்பாளராக நயினார் நாகேந்திரன் போட்டியிட்டார். அப்போது தேர்தல் செலவுக்காக சென்னையிலிருந்து நெல்லைக்கு எடுத்துச் செல்லப்பட்ட சுமார் 4 கோடி ரூபாயை தாம்பரம் ரயில் நிலையத்தில் போலீஸார் மடக்கிப் பிடித்தனர்.
ஆனால், இந்தப் பணம் தனக்குச் சொந்தமானது இல்லை என மறுத்தார் நயினார் நாகேந்திரன். இது சம்பந்தமான வழக்கு இன்னும் விசாரணையில் இருக்கும் நிலையில், மீண்டும் இன்னொரு பண விவகாரத்தில் நயினார் தரப்பைக் போட்டுக்கொடுத்து போலீஸில் சிக்க வைத்திருக்கிறார்கள்.
கடந்த 8-ம் தேதி, சென்னையில் உள்ள பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் அமைப்பு பொதுச் செயலாளர் கேசவ விநாயகம் தலைமையில் மண்டல, மாவட்ட மற்றும் கோட்ட பொறுப்பாளர்கள், அமைப்பாளர்களுக்கான ஆய்வுக் கூட்டம் நடந்தது.
இதன் முடிவில், எஸ்ஐஆர் பணிகளை மேற்கொண்ட கட்சி ஊழியர்களின் செலவுகளுக்காகவும், டிசம்பர் 12-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை நடைபெற உள்ள பயிற்சி பயிலரங்கம், தேர்தல் களப்பணி ஆலோசனைக் கூட்டங்கள் நடத்துவதற்காகவும் கோட்டம் வாரியாக பணப் பட்டுவாடா செய்யப்பட்டிருக்கிறது
இதில், மற்ற கோட்டங்களுக்கான பணம் எல்லாம் பத்திரமாகப் போய்ச் சேர்ந்துவிட்ட நிலையில், நயினாரின் நெல்லைக் கோட்டத்துக்கு அனுப்பப்பட்ட பணம் 10.50 லட்சம் மட்டும் போலீஸில் சிக்கி இருக்கிறது. நெல்லை மண்டல சட்டப்பேரவை தொகுதிகளின் அமைப்பாளரும் நயினார் நாகேந்திரனின் நண்பருமான நீலம் முரளி யாதவ் தான் இந்தப் பணத்தை எடுத்துக் கொண்டு 9-ம் தேதி அதிகாலை சென்னையிலிருந்து நாகர்கோவிலுக்குப் புறப்பட்ட வந்தே பாரத் ரயிலில் பயணமாகி இருக்கிறார்.
அந்த ரயில் திண்டுக்கல்லை அடைந்தபோது, திடீரென ரயிலில் ஏறிய போலீஸார், கணக்கில் காட்டப்படாத பணம் மற்றும் நகை கொண்டு செல்லப்படுவதாக தங்களுக்குக் தகவல் கிடைத் திருப்பதாகச் சொல்லி பயணிகளின் உடைமைகளை சோதனையிட்டுள்ளனர்.
சோதனையில், நீலம் முரளி யாதவ்வின் சூட்கேஸில் இருந்த ரூ.10.50 லட்சம் சிக்கி இருக்கிறது. அந்தப் பணம் எதற்காகத் தரப்பட்டது என்பதற்கான ஆவணங்களை முரளி எடுத்துக் காட்டியும் ஏற்காத போலீஸார், அவரைக் கோவில்பட்டி கிழக்கு போலீஸ் ஸ்டேஷனில் கொண்டுபோய் ஒப்படைத்துவிட்டுப் போயிருக்கிறார்கள்.
அங்கிருந்த போலீஸார், அந்தப் பணம் குறித்து முரளியிடம் முழுமையாக விசாரணை நடத்திய பிறகு, பணத்தை திருப்பிக் கொடுத்து அவரை கும்பிட்டு வழியனுப்பி வைத்திருக்கிறார்கள்.
ஏற்கெனவே நயினார் தரப்பு 4 கோடி ரூபாயை ரயிலில் எடுத்துச் சென்ற விவகாரத்தை பாஜக-வில் இருக்கும் அவரது எதிரிகளே தான் போலீஸுக்குப் போட்டுக் கொடுத்து சிக்கவைத்தார்கள்.
இப்போதும் அதேபோல், நயினாரின் நண்பரால் அவரது மண்டலத்துக்கு எடுத்துச் செல்லப்பட்ட பணம் குறித்து போலீஸுக்கு துல்லியமாகப் போட்டுக் கொடுத்து நயினார் தரப்பை ஹீட்டாக்கி அதில் குளிர்காய்ந்திருக்கிறது எதிர்கோஷ்டி.