

கோப்புப் படம்
சென்னை: குடியரசு தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் பாதுகாப்பு பணியில் ஒரு லட்சம் போலீஸார் ஈடுபடுத்தப்பட உள்ளனர். மக்கள் அதிகம் கூடும் இடங்கள், கடலோரப் பகுதிகளில்கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
குடியரசு தின விழா வரும் 26-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. அன்றைய தினம், டெல்லியில் பிரதமர் மோடி முன்னிலையில் தேசியக் கொடியை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு ஏற்றுகிறார். சென்னையில் மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கொடியேற்றுகிறார்.
குடியரசு தின விழாவில் தீவிரவாதிகள் நாசவேலையில் ஈடுபட வாய்ப்பு உள்ளதாக உளவுப் பிரிவு போலீஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. எனவே, குடியரசு தின விழாவையொட்டி நாடு முழுவதும் பாதுகாப்பை பலப்படுத்த மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. பாதுகாப்பில் கூடுதல் கவனம் செலுத்துமாறு அறிவுறுத்தி, அனைத்து மாநில அரசுகளுக்கும் உள்துறை அமைச்சகம் கடிதம் அனுப்பியுள்ளது.
இந்த எச்சரிக்கையை தொடர்ந்து, தமிழகத்திலும் போலீஸார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். பேருந்து, ரயில், விமான நிலையங்கள், வழிபாட்டுத் தலங்கள், வணிக வளாகங்கள், திரையரங்குகள் என மக்கள் அதிகம் கூடும் இடங்களிலும், கடலோரப் பகுதிகளிலும் பாதுகாப்பு, கண்காணிப்பை அதிகரிக்க வேண்டும். இரவு நேரத்தில் வாகன சோதனையை தீவிரப்படுத்த வேண்டும். விடுதிகளில் சந்தேகத்துக்குரிய வகையில் யாரேனும் தங்கி உள்ளனரா என்பதை கண்காணிக்க வேண்டும் என்று போலீஸாருக்கு பொறுப்பு டிஜிபி வெங்கடராமன் அறிவுறுத்தி உள்ளார்.
குடியரசு தின விழாவையொட்டி தமிழகம் முழுவதும் ஒரு லட்சம் போலீஸார் பாதுகாப்பு, கண்காணிப்பில் ஈடுபடுகின்றனர்.
சென்னையில் காவல் ஆணையர்அருண் மேற்பார்வையில் 18 ஆயிரம் போலீஸார் இப்பணியில் ஈடுபட உள்ளனர். குடியரசு தினவிழா நெருங்க நெருங்க, போலீஸாரின் பாதுகாப்பு கெடுபிடி அதிகரிக்கும் எனத் தெரிகிறது.