

சென்னை: நாகர்கோவிலில் இருந்து மங்களூரு, சர்லபள்ளி மற்றும் தாம்பரம் - திருவனந்தபுரம் என தமிழகத்தில் இருந்து அண்டை மாநிலங்களை இணைக்கும் வகையில் 3 புதிய அம்ரித் பாரத் ரயில்களை இயக்க ரயில்வே துறை அனுமதி அளித்துள்ளது. இதற்கு மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் நன்றி தெரிவித்துள்ளார்.
மக்களின் வசதிக்காக, தமிழகத்தின் சென்னை மற்றும் கன்னியாகுமரியை திருவனந்தபுரம் (கேரளா), செகந்திராபாத் (தெலங்கானா), மங்களூருவுடன் (கர்நாடகா) இணைக்கும் புதிய ரயில் சேவையை அறிமுகம் செய்வது குறித்து ரயில்வே அமைச்சர் அஸ்வினிவைஷ்ணவ் உடன் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் சமீபத்தில் ஆலோசனை நடத்தினார்.
இதன் தொடர்ச்சியாக, நாகர்கோவில் (கன்னியாகுமரி) - மங்களூரு இடையிலும், நாகர்கோவில் - சர்லபள்ளி (செகந்திராபாத்) இடையிலும், தாம்பரம் - திருவனந்தபுரம் இடையிலும் அம்ரித் பாரத் ரயில்களை இயக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
இதற்கு நன்றி தெரிவித்து எல்.முருகன் வெளியிட்ட அறிக்கை: ரயில்கள் மூலம் தென் மாநிலங்களின் வெவ்வேறு பகுதிகளை இணைக்கும் வகையில், சென்னை - கன்னியாகுமரி இடையிலான ரயில் போக்குவரத்தை, திருவனந்தபுரம், செகந்திராபாத், மங்களூரு வழியாக இயக்குவது தொடர்பாக சமீபத்தில் மத்திய ரயில்வே அமைச்சரிடம் ஆலோசனை நடத்தினேன். அதன்பேரில், விரைந்து நடவடிக்கை எடுத்து, மேற்கண்ட ரயில் நிலையங்களை இணைக்கும் புதிய அம்ரித் பாரத் ரயில் இயக்கத்துக்கு அனுமதி வழங்கியிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.
அதன்படி, கன்னியாகுமரி, மங்களூரு, சர்லபள்ளி,தாம்பரம், திருவனந்தபுரம் போன்ற முக்கிய நகரங்களையும், அதற்கு உட்பட்ட ரயில் நிலையங்களையும் இந்த புதிய அம்ரித் பாரத் ரயில் சேவை இணைக்கிறது.
இதன்மூலம், பொதுமக்களின் தனிப்பட்ட பயணங்களும், தொழில் ரீதியிலான பயணங்களும் மேலும் எளிதாக மாறும். தமிழக மக்களின் கோரிக்கைகள், ஆலோசனைகளுக்கு தொடர்ந்து தீர்வு கண்டு வரும் பிரதமர் நரேந்திர மோடி, ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆகியோருக்கு தமிழக மக்கள் சார்பில் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.