

சென்னை: பதினெட்டு ஆண்டுகளுக்கு முன்பு கொலை செய்யப்பட்ட கனிமவளத் துறை அதிகாரியின் வீட்டில் ‘அமானுஷ்யம்’ இருப்பதாக சமூக வலைதளங்களில் ரீல்ஸ் வெளியிடப்பட்டு வருகிறது. இதையடுத்து அந்த வீட்டுக்குள் யாரும் நுழையாதபடி போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
சென்னை அசோக் நகர் நடேசன் நகரில் வசித்து வந்த ஓய்வுபெற்ற கனிமவளத் துறை அதிகாரி (டாமின் தலைவர்) சரவணன். அவரது மனைவி கஸ்தூரி, வீட்டு வேலைக்கார பெண் அன்புக்கரசி ஆகியோர் கடந்த 2008-ல் கொலை செய்யப்பட்டனர்.
சிபிசிஐடி போலீஸார் விசாரணைநடத்தி சரவணனின் கார் ஓட்டுநர் உட்பட 4 பேரை கைது செய்தனர். கொலை நடந்து 18 ஆண்டுகள் ஆன நிலையில் கனிமவளத் துறை அதிகாரி சரவணன், மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் மற்றும் வீட்டின் பொருட்கள் சிதறிக் கிடப்பதுடன், கார், வீடு, அனைத்தும் பாழடைந்த நிலையில் உள்ளன.
இதைக் கண்ட இளைஞர்கள் சிலர் அந்த வீட்டில் ‘அமானுஷ்யம்’ இருப்பதாகக் கூறி அத்துமீறி, வீட்டுக்குள் நுழைந்து ரீல்ஸ் எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகின்றனர்.
இந்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி பொதுமக்கள் மத்தியில் தேவையற்ற அச்சத்தையும், குழப்பத்தையும் ஏற்படுத்தி வருகிறது. இதையடுத்து, அந்த வீட்டின் முன்பு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வீட்டில் அத்துமீறி நுழைவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸ் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.