

சென்னை: தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, மாநகர பேருந்துகளில் மின்னணு பயணச்சீட்டு கருவியின் செயல்பாடு முடங்கியது. இதனால், யுபிஐ, சிங்கார சென்னை அட்டை பயன்படுத்தும் பயணிகள் பாதிக்கப்பட்டனர்.
சென்னை மாநகரத்தின் பொதுப் போக்குவரத்து சேவைகளில், மாநகர பேருந்துகள் முக்கிய பங்காற்றுகின்றன. புறநகர் ரயில், மெட்ரோ ஆகியவை இருந்தாலும் குறைவான கட்டணம், அனைத்து இடங்களுக்கும் சேவை, மாநகர் - புறநகர் இணைப்பு உள்ளிட்ட அம்சங்கள் காரணமாக பெரும்பாலான மக்கள் மாநகர பேருந்துகளை தேர்வு செய்கின்றனர்.
பயணிகளுக்கான சேவைகளை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மாநகர போக்குவரத்து கழகம் மேற்கொண்டு வருகிறது. யுபிஐ, ஸ்மார்ட் கார்டு, டெபிட் கார்டு மூலம் டிக்கெட் பெறும் வகையில், கையடக்க மின்னணு பயணச்சீட்டு கருவி கடந்த 2024-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது.
இதன்மூலம் நடத்துநர், பயணிகள் இடையே சில்லறை தொடர்பான பிரச்சினைகள் குறைந்தன. இந்நிலையில், நேற்று காலை மாநகர பேருந்துகளில் டிக்கெட் வழங்கும் மின்னணு பயணச்சீட்டு கருவி செயல்படவில்லை.
இதன் காரணமாக, பழைய முறைப்படி அச்சிடப்பட்ட பயணச்சீட்டுகள் பயன்படுத்தப்பட்டன. இதனால், யுபிஐ, சிங்கார சென்னை அட்டை பயன்படுத்துவோர் பாதிக்கப்பட்டனர். யுபிஐ, சிங்கார சென்னை அட்டை ஆகியவை எப்போதும் சரியாக செயல்படுவதால் கையில் சில்லறை வைத்திருக்கவில்லை என பயணிகள் சிலர் கூறினர்.
இது குறித்து, மாநகர போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியதாவது: தொழில்நுட்பக் கோளாறு காரணமாக மின்னணு பயணச்சீட்டு கருவிகளின் செயல்பாடு தற்காலிகமாக தடைபட்டது.
மென்பொருளில் நேற்றைய கணக்குகள் முடிக்கப்பட்டு, அடுத்த நாளுக்கான கணக்குகளுடன் மென்பொருள் தானாக தயாராகும். இந்த நடைமுறையில் சிக்கல் ஏற்பட்டதால், கருவிகளை பயன்படுத்த முடியவில்லை.
எப்போதும் அச்சிடப்பட்ட பயணச்சீட்டுகளை நாங்கள் தயாராக வைத்திருப்போம் அதனால், பேருந்து சேவைகள் எவ்வித தாமதமும் இன்றி இயக்கப்பட்டது. மதியத்துக்கு மேல் பிரச்சினை சரி செயப்பட்டு மீண்டும் மின்னணு கருவிகள் பயன்பாட்டுக்கு வந்தது என்றனர்.