

சென்னை: சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே பச்சையப்பன் கல்லூரி மற்றும் மாநிலக் கல்லூரி மாணவர்கள் மோதிக்கொண்டனர். இந்த விவகாரத்தை அடுத்து தகராறில் ஈடுபடும் மாணவர்கள் மீது பாரபட்சம் இன்றி நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் ஆணையர் அமல்ராஜ் எச்சரித்துள்ளார்.
சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே உள்ள ஆட்டோ ஸ்டாண்டில் நேற்று முன்தினம் மாலை பச்சையப்பன் கல்லூரியை சேர்ந்த சுமார் 20 மாணவர்கள் நின்று பேசிக்கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக மாநிலக் கல்லூரியை சேர்ந்த சுமார் 20 மாணவர்கள் வந்தனர்.
பச்சையப்பன் கல்லூரி மாணவர்களை பார்த்ததும், அருகில் கிடந்த கற்களை எடுத்து அவர்கள் மீது வீசித் தாக்கியுள்ளனர். பதிலுக்கு பச்சையப்பன் கல்லூரி மாணவர்களும் பதிலுக்கு கற்களை வீசித் தாக்குதல் நடத்தினர்.
கற்கள் வீசப்பட்டதில் அவ்வழியாகச் சென்ற மாநகரப் பேருந்தின் கண்ணாடி சேதமடைந்தது. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பதற்றமான சூழல் நிலவியது.
இதுபற்றி பொதுமக்கள் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். பெரியமேடு போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். போலீஸாரை பார்த்ததும் மோதலில் ஈடுபட்ட மாணவர்கள் அங்கிருந்து தப்பி ஓடினர்.
போலீஸார் அவர்களை விரட்டியதில், திருவள்ளூரை சேர்ந்த பச்சையப்பன் கல்லூரி மாணவர் ஒருவர் மட்டும் பிடிபட்டார். அவரை காவல் நிலையம் அழைத்துச் சென்று தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
மேலும் தப்பி ஓடிய மாணவர்களை அடையாளம் கண்டு, அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கும் பணியும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், மாணவர்கள் மோதலில் ஈடுபடுவதைத் தவிர்க்க வேண்டும் என்றும், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் செயல்படுபவர்கள் மீது பாரபட்சம் இன்றி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை காவல் ஆணையர் அமல்ராஜ் எச்சரித்துள்ளார்.