

சென்னை: விக்சித் பாரத் இளம் தலைவர்கள் உரையாடல் நிகழ்வில் பங்கேற்க விருப்பம் உள்ளவர்கள் செப்.30-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று மத்திய இளைஞர் நலன், விளையாட்டு அமைச்சகத்தின் தமிழகப் பிரிவு இயக்குநர் செந்தில் குமார் தெரிவித்துள்ளார்.
சுவாமி விவேகானந்தர் பிறந்தநாளான ஜன.12-ம் தேதி தேசிய இளைஞர் தினம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி மத்திய இளைஞர் நலன், விளையாட்டு அமைச்சகம் சார்பில் ஆண்டுதோறும் விக்சித் பாரத் இளம் தலைவர்கள் உரையாடல் என்ற நிகழ்வு டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் நடத்தப்படுகிறது.
2047-க்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றுவதற்கான புதுமையான யோசனைகள், ஆலோசனைகள், தீர்வுகளை பிரதமரிடம் இளைஞர்கள் நேரடியாகத் தெரிவிக்கலாம். இந்நிலையில், 2027 ஜனவரியில் நடைபெற உள்ள நிகழ்வுக்கான தேர்வுகள், விநாடி-வினா போட்டிகள் நாடு முழுவதும் தொடங்கியுள்ளன.
இதுகுறித்து சென்னையில் மத்திய இளைஞர் நலன், விளையாட்டு அமைச்சகத்தின் தமிழகம், புதுச்சேரி பிரிவு இயக்குநர் செந்தில்குமார் கூறியதாவது: விக்சித் பாரத் இளம் தலைவர்கள் உரையாடல் 5 கட்டமாக நடைபெறுகிறது. முதல்கட்டத்தில், ‘மை பாரத்’ இணையதளத்தில் (mybharat.gov.in) கடந்த செப்.1-ம் தேதி தொடங்கியுள்ள ஆன்லைன் விநாடி-வினா போட்டி செப்.30-ம் தேதி வரை நடைபெற உள்ளது.
2-ம் கட்டமாக, கட்டுரைப் போட்டி அக்.5 முதல் 19-ம் தேதி வரை ஆன்லைனில் நடைபெறும். 3-ம் கட்டமாக ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் சிறந்த 50 கட்டுரைகள் ‘பிபிடி விளக்கக் காட்சி’ சுற்றுக்கு தேர்ந்தெடுக்கப்படும். மாவட்ட அளவிலான பிபிடி விளக்கக் காட்சி நவ.10 முதல் 16-ம் தேதி வரை நடைபெறும். கடல்சார் பொருளாதாரம், மனிதவளம், உலகளாவிய போட்டித் திறன் என்ற கருப்பொருளின் அடிப்படையில் இது நடைபெறும்.
4-வது கட்டமாக, மாநில அளவிலான விக்சித் பாரத் உரையாடல் நவ.17 முதல் டிச.12-ம் தேதி வரை நடைபெறும். 5-வது கட்டமாக தேசிய அளவிலான போட்டி ஜன.10 முதல் 12-ம் தேதி வரை நடைபெறும். ஆர்வம் உள்ள இளைஞர்கள் ‘மை பாரத்’ இணைய தளம் மூலம் பதிவு செய்து பங்கேற்கலாம். இதுவரை 70 ஆயிரம் இளைஞர்கள் பதிவு செய்துள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.