

சென்னை: அறிமுகமில்லாத நபர்களிடம் தனிப்பட்ட புகைப்படங்களை பகிர வேண்டாம் என கல்லூரி மாணவிகளுக்கு சைபர் க்ரைம் போலீஸார் அறிவுறுத்தி உள்ளனர்.
சென்னை பெருநகர காவல் துறை சார்பில், சைபர் குற்றங்களில் இருந்து பொதுமக்களையும் மாணவர்களையும் பாதுகாக்கும் நோக்கில் தொடர் விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக, சென்னை ராணி மேரி கல்லூரியில் நேற்று இணையவழி குற்றத்தடுப்பு விழிப்புணர்வு மற்றும் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
இணையவழி குற்றத் தடுப்புப் பிரிவு காவல் துணை ஆணையர் கே.எஸ்.பாலகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், தற்போது பரவி வரும் பல்வேறு மோசடிகள் குறித்து மாணவிகளுக்கு விளக்கப்பட்டது.
குறிப்பாக, ஆன்லைன் வர்த்தக மோசடி, டிஜிட்டல் கைது மோசடி, போலி முதலீட்டு மோசடி உள்ளிட்ட பல்வேறு இணையவழி குற்றங்கள் குறித்தும், அவற்றில் பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் எவ்வாறு ஏமாற்றப்படுகின்றனர் என்பது குறித்தும் விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.
மேலும், மாணவிகள் சமூக வலைதளங்களை கையாளும் போது கடைப்பிடிக்க வேண்டிய பாதுகாப்பு வழிமுறைகள் குறித்தும் ஆலோசனைகள் வழங்கப்பட்டன.
குறிப்பாக, அறிமுகமில்லாத நபர்களிடம் தனிப்பட்ட புகைப்படங்கள் மற்றும் தகவல்களைப் பகிர வேண்டாம் எனவும், சந்தேகத்துக்கிடமான லிங்க்-குகளை கிளிக் செய்ய வேண்டாம் எனவும் எச்சரிக்கப்பட்டது.
இணையவழி குற்றங்களால் யாரேனும் பாதிக்கப்பட்டால், உடனடியாக 1930 என்ற உதவி எண்ணை அழைக்க வேண்டும் அல்லது www.cybercrime.gov.in என்ற இணையதளத்தில் புகார் பதிவு செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.
தொடர்ந்து, "இணையவழி குற்றங்களுக்கு எதிராக விழிப்புடன் செயல்படுவோம், இது குறித்து குடும்பத்தினர் மற்றும் நண்பர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவோம்" என்று சுமார் 2,500 மாணவிகள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
இந்த பிரம்மாண்ட நிகழ்ச்சியில் ராணி மேரி கல்லூரி முதல்வர் கலைவாணி, இணையவழி குற்றத்தடுப்பு பிரிவு கூடுதல் காவல் துணை ஆணையர் விஸ்வநாத் ஜெயன், உதவி ஆணையர்கள் மனோஜ்குமார், ராகவி மற்றும் காவல் ஆய்வாளர்கள் கலந்துகொண்டனர்.