‘நெல்லுக்கு ரூ.3,500, கரும்புக்கு ரூ.5,000’ - பாமகவின் வேளாண் நிழல் பட்ஜெட் முக்கிய அம்சங்கள்

‘நெல்லுக்கு ரூ.3,500, கரும்புக்கு ரூ.5,000’ - பாமகவின் வேளாண் நிழல் பட்ஜெட் முக்கிய அம்சங்கள்
Updated on
2 min read

சென்னை: பாமகவின் 2026–2027-ஆம் ஆண்டுக்கான 19-வது வேளாண் நிழல் நிதிநிலை அறிக்கை இன்று வெளியிடப்பட்டது. இதில் வேளாண்மை மற்றும் அது சார்ந்த துறைகளுக்கு மொத்தம் ரூ.1.5 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டு உள்ளது. அந்த நிழல் பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள் :

> பாமகவின் 19-ஆம் வேளாண் நிழல் நிதிநிலை அறிக்கை மொத்தம் ரூ.93,000 கோடி மதிப்பு கொண்டதாக இருக்கும். இதில் ரூ.68,000 கோடி வேளாண் துறை மூலம் செலவிடப்படும். இதுதவிர, பாசனத் திட்டங்களுக்காக நீர்வளத் துறை மூலம் ரூ.25,000 கோடி செலவிடப்படும்.

> 2025-26-ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையில் வேளாண் துறைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட ரூ.15,230.30 கோடியுடன் ஒப்பிடும்போது, இது 446% அதிகம்.

> வேளாண் துறைக்கான நிதி ஒதுக்கீட்டில் ரூ.13,000 கோடி உழவர்கள் இடுபொருள் மானியத்துக்கு செலவிடப்படும்.

> வேளாண் கட்டமைப்பு, வேளாண் கல்வி மற்றும் ஆராய்ச்சி கட்டமைப்புகளை மேம்படுத்தும் திட்டங்களுக்கு ரூ.25,000 கோடி செலவிடப்படும்.

> பயிர்க் காப்பீடு உள்ளிட்ட பிற திட்டங்களுக்கு ரூ.30,000 கோடி செலவிடப்படும்.

வேளாண் சார்ந்த துறைகளுக்கு ரூ.1.5 லட்சம் கோடி

> தமிழ்நாட்டின் நிதிநிலை அறிக்கை மதிப்பில் 25% வேளாண்மை மற்றும் அது சார்ந்த துறைகளுக்கு ஒதுக்கப்பட வேண்டும் என்பது பாட்டாளி மக்கள் கட்சியின் நிலைப்பாடு ஆகும். அதன்படி, நடப்பாண்டின் நிதிநிலை அறிக்கை மதிப்பான ரூ.6 லட்சம் கோடியில் ரூ.1.5 லட்சம் கோடி வேளாண்மை சார்ந்த துறைகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

குறுவை சாகுபடிக்கு ஏக்கருக்கு ரூ.5,000 சிறப்பு மானியம்

> குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படாத நிலையில், பாசனத் தேவைகளுக்கு ஏற்படும் கூடுதல் செலவை கருத்தில் கொண்டு ஏக்கருக்கு ரூ.5,000 சிறப்பு மானியம் வழங்கப்படும்.

> நிலத்தடி நீர் ஆதாரம் இல்லாத பகுதிகளில் குறுவை சாகுபடி மேற்கொள்ளப்படாததால் ஏற்படும் இழப்பைக் கருத்தில் கொண்டு, உழவர்களுக்கு ஏக்கருக்கு ரூ.10,000 இழப்பீடு வழங்கப்படும்.

வேளாண்துறை பங்களிப்பை 20%ஆக உயர்த்த சிறப்புத் திட்டங்கள்

> 2023-24, 2024-25 ஆகிய ஆண்டுகளில் வேளாண்துறை வீழ்ச்சியடைந்ததால், தமிழ்நாட்டில் ஒட்டுமொத்த பொருளாதார உற்பத்திக்கு (ஜிஎஸ்டிபி) அத்துறையின் பங்களிப்புக்கு 2.99%ஆக குறைந்திருக்கிறது. இதை அடுத்த 5 ஆண்டுகளில் 20%ஆக உயர்த்த சிறப்புத் திட்டங்கள் செயல்படுத்தப்படும். இதற்கான அடித்தளம் அமைக்கும் சிறப்பாண்டாக நடப்பாண்டு கடைபிடிக்கப்படும்.

நெல்லுக்கு ரூ.3,500, கரும்புக்கு ரூ.5,000

> நெல் கொள்முதல் விலை குவிண்டாலுக்கு ரூ.3,500, கரும்புக்கு டன்னுக்கு ரூ.5,000 ஆக உயர்த்தப்படும்.

> வேளாண் விளைபொருட்களை கொள்முதல் செய்வதற்காக தனி வாரியம் ஏற்படுத்தப்படும்.

கொள்முதலை கட்டாயமாக்க சிறப்புச் சட்டம்

> தமிழ்நாட்டில் அனைத்து வகையான வேளாண் விளைபொருட்களையும் அரசே கொள்முதல் செய்வதை கட்டாயமாக்கும் வகையில், வேளாண் விளைபொருட்கள் (கொள்முதல் விலை நிர்ணயம் மற்றும் கொள்முதல்) சட்டம் - 2026 இயற்றப்படும்.

> கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளை பாதுகாத்து வைப்பதற்காக, அரசு கிடங்குகளின் எண்ணிக்கை இப்போதுள்ள 302-லிருந்து அடுத்த 3 ஆண்டுகளில் 1000ஆக உயர்த்தப்படும்.

> அனைத்து மாவட்டங்களிலும் உணவுப் பதனத் தொழிற்சாலைகள் அமைக்கப்படும்.

> காவிரி ஆற்றின் குறுக்கே மேகேதாட்டு அணை கட்டுவதற்கான நடவடிக்கைகளை கர்நாடக அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. அரசியல் மற்றும் சட்டப்போராட்டம் மூலம் இந்த முயற்சி முறியடிக்கப்படும்.

> நீர்ப்பாசனத் திட்டங்களை புத்தெழுச்சியுடன் செயல்படுத்த தமிழ்நாடு நீர்ப்பாசனத் திட்ட செயலாக்க ஆணையம் என்ற புதிய அமைப்பு உருவாக்கப்படும்.

> காவிரி - குண்டாறு இணைப்பு 3 ஆண்டுகளில் நிறைவடையும்.

> தமிழ்நாட்டில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள தமிழ்நாடு நீர்ப்பாசனத் திட்ட செயலாக்க ஆணையத்தின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் ரூ.25,000 கோடி மதிப்பில் பாசனத் திட்டங்கள் செயல்படுத்தப்படும்.

> தமிழ்நாட்டில் புதிய மணல் குவாரிகள் தொடங்கப்படாது. ஒரு சில இடங்களில் செயல்பட்டு வரும் மணல் குவாரிகள் மூடப்படும்.

> தமிழ்நாட்டில் இயற்கை சீற்றங்களால் பாதிக்கப்படும் பயிர்களுக்கு நியாயமான இழப்பீடு கிடைப்பதை உறுதி செய்ய புதிய பயிர்க்காப்பீட்டு நிறுவனத்தை தமிழக அரசே தொடங்கும்.

> வேளாண்மை மற்றும் தோட்டக்கலைத் துறையில் 50 லட்சம் புதிய வேலைவாய்ப்புகளை ஏற்படுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அடுத்த 5 ஆண்டுகளில் இந்த வேலைவாய்ப்புகள் ஏற்படுத்தப்படும்.

> காவிரி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், அரியலூர், மயிலாடுதுறை, கடலூர், திருச்சி, கரூர், புதுக்கோட்டை ஆகிய 9 மாவட்டங்களையும் உள்ளடக்கியதாக விரிவாக்கப்படும். இதற்கான சட்டத்திருத்தம் நடப்பு தொடரில் நிறைவேற்றப்படும்.

> தமிழகத்தை 4 மண்டலங்களாக பிரித்து ஒவ்வொரு மண்டலத்திலும் ஒரு வேளாண் பல்கலைக் கழகம் அமைக்கப்படும். கோவையில் ஏற்கெனவே வேளாண் பல்கலைக் கழகம் உள்ள நிலையில், தஞ்சாவூர், வேலூர், நெல்லை ஆகிய நகரங்களில் புதியப் பல்கலைக் கழகங்கள் அமைக்கப்படும்.

> மத்திய அரசால் மகாத்மா காந்தி வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்திற்கு மாற்றாக அறிவிக்கப்பட்டுள்ள வளர்ச்சியடைந்த பாரதம் கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின்படி, வேலை வழங்கப்படும் நாள்களின் எண்ணிக்கை 125-லிருந்து 150ஆக உயர்த்தப்படும்.

> தமிழ்நாட்டில் பசுமைப் பரப்பை அதிகரிக்கும் நோக்குடன், அடுத்த 5 ஆண்டுகளில் 300 கோடி மரக்கன்றுகள் நடப்படும். இத்திட்டத்திற்கு பசுமைத் தமிழகம் என்று பெயரிடப்பட்டுள்ளது.

> வேளாண்துறை வளர்ச்சிக்கான திட்டங்களை செயல்படுத்துவதற்கு வசதியாக மொத்தம் 82 தலைப்புகளில் 226 யோசனைகளை தமிழக அரசுக்கு தெரிவித்திருக்கிறோம். இவற்றை பாமகவின் திட்டங்களாக கருதாமல், வேளாண் பெருமக்களின் கோரிக்கையாக கருதி இவற்றில் அரசுக்கு சாத்தியமானவற்றை ஆகஸ்ட் மாதத்தில் தாக்கல் செய்யப்படவுள்ள தமிழக அரசின் ஆறாம் வேளாண் நிதிநிலை அறிக்கையில் சேர்க்க வேண்டும்; நிறைவேற்ற வேண்டும் என்பதுதான் பாமகவின் விருப்பமும் வேண்டுகோளும் ஆகும்.

‘நெல்லுக்கு ரூ.3,500, கரும்புக்கு ரூ.5,000’ - பாமகவின் வேளாண் நிழல் பட்ஜெட் முக்கிய அம்சங்கள்
தேசிய திரைப்பட விருதுகள் வென்ற தமிழ் கலைஞர்களுக்கு சரத்குமார் வாழ்த்து

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in