

சென்னை: நீட் தேர்வு விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக நேற்று அவர் வெளியிட்ட அறிக்கை: நீட் தேர்வு அச்சம் காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் அடுத்தடுத்து ஒரு மாணவியும், ஒரு மாணவரும் தற்கொலை செய்து கொண்டிருக்கின்றனர் என்ற செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியும், கவலையும் அடைந்தேன். அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஏற்கெனவே, கடந்த 17-ம் தேதி கோவையை சேர்ந்த மாணவி, 19-ம் தேதி சேலம் எடப்பாடியை சேர்ந்த மாணவி தற்கொலை செய்து கொண்ட நிலையில், இந்த இரு நிகழ்வுகளையும் சேர்த்து 4 நாட்களில் 4 மாணவ, மாணவிகளை நீட் தேர்வுக்கு பலி கொடுத்திருக்கிறோம்.
இந்த கொடுமை தொடரக் கூடாது. அதற்காக நீட் தேர்வை தேசிய அளவில் ரத்து செய்யவோ அல்லது தமிழகத்துக்கு மட்டும் விலக்கு அளிக்கவோ மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
தற்கொலை தீர்வாகாது
தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்ட அறிக்கையில், “நீட் தேர்வில் வெற்றிபெறாதவர்கள், குறைந்த மதிப்பெண் எடுத்தவர்கள் அடுத்த ஆண்டும் தேர்வு எழுதி வெற்றி பெறலாம். ஆகையால் தேர்வு பயத்தால் தவறான முடிவை எடுக்கக்கூடாது. நாட்களுக்கு முன்பு ஒரு மாணவி தற்கொலை செய்துகொண்ட நிகழ்வு மிகவும் வருத்தம் அளிக்கிறது.
தற்கொலை பிரச்சினைக்கு என்றும் தீர்வாகாது. உங்களின் எதிர்காலத்துக்கான வாய்ப்புகள் பரந்து விரிந்துள்ளது. இத்துறையில் இல்லையென்றாலும், எத்துறையிலும் சாதிக்கலாம். அதற்கான சூழலை நாம் அமைத்துக்கொள்ள வேண்டும். மாணவர்களே உங்கள் எதிர்காலம் உங்கள் கையில். யாருக்காகவும், எதற்காகவும் அஞ்ச தேவையில்லை. விடாமுயற்சியோடு முயன்றால் வெற்றி நிச்சயம்” என்று கூறியுள்ளார்.