அன்று அன்பு சொன்னது... இன்றும் அய்யா செய்வதும்..!

பாமக மாநில இளைஞர் சங்கத் தலைவராக 2-வது முறையாக தமிழ்குமரனை கடந்த அக்டோபர் மாதம் நியமித்து ஆணை வழங்கிய நிறுவனர் ராமதாஸ்.  (கோப்பு படம்)

பாமக மாநில இளைஞர் சங்கத் தலைவராக 2-வது முறையாக தமிழ்குமரனை கடந்த அக்டோபர் மாதம் நியமித்து ஆணை வழங்கிய நிறுவனர் ராமதாஸ்.  (கோப்பு படம்)

Updated on
2 min read

பாமக தலைவர் பதவியில் 25 ஆண்டுகளாக இருந்த ஜி.கே.மணியை நீக்கிவிட்டு, அந்த இடத்துக்கு மகன் அன்புமணியை கொண்டு வந்தார் கட்சியின் நிறுவனர் ராமதாஸ்.

அதிருப்தியில் இருந்த ஜி.கே.மணியை சரி கட்ட, அவரது மகன் தமிழ்குமரனுக்கு, அன்புமணி வகித்த மாநில இளைஞர் சங்கத் தலைவர் பதவியை வழங்கினார். இதை அன்புமணி எதிர்த்தார். இந்த எதிர்ப்பை, ராமதாஸ் பொருட்படுத்தவில்லை.

குடும்ப உறுப்பினர்களின் தலையீடு காரணமாக, தமிழ்குமரனை நீக்கவிட்டு, மாநில இளைஞர் சங்கத் தலைவர் பதவியில் மகள் ஸ்ரீகாந்தியின் மகனான பேரன் முகுந்தனை கொண்டு வந்தார். இதற்கும் எதிர்ப்பு தெரிவித்த அன்புமணி, மேடையிலேயே மைக்கை தூக்கி வீசி அதிர்வலையை ஏற்படுத்தினார்.

இந்தச் சிக்கல் மற்றும் அடுத்தடுத்து நடந்த சில விவகாரங்களால் தந்தை - மகன் இடையே பெரும் மோதல் ஏற்பட்டு, கடந்த 15 மாதங்களாக பிரிந்திருக்கின்றனர். பாமக பிளவுபட்டு நிற்கிறது.

தமிழ் குமரனை நியமித்த அந்த தருணத்தில், அதற்கு எதிர்ப்பு தெரிவித்த அன்புமணி, “மாநில இளைஞர் சங்கத் தலைவர் பதவிக்கு தமிழ்குமரன் தகுதி இல்லாதவர், சினிமா துறையில் இருக்கும் அவரால் கட்சி பணியை முழுமையாக செய்ய முடியாது” என்று குற்றஞ்சாட்டினார்.

மேலும் பாமகவில் நிலவும் பிரச்சினைக்கு முக்கிய காரணமே திமுக ஆதரவாளர்களான ஜி.கே.மணி மற்றும் சேலம் எம்எல்ஏ அருள் ஆகியோர்தான் என்று கருத்து தெரிவித்தார். இக்குற்றச்சாட்டை இருவரும் மறுத்தனர்.

இதற்கிடையில், பாமக தலைவர் பதவி மற்றும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து அன்புமணியை நீக்கிய ராமதாஸ், மாநில இளைஞர் சங்க தலைவர் பதவியில் தமிழ்குமரனை கடந்த 5 மாதங்களுக்கு முன்பு மீண்டும் நியமித்தார்.

அதன்பிறகு அவரை கட்சி நிகழ்ச்சியில் காண முடியவில்லை. தைலாபுரத்தில் நடைபெற்ற கூட்டங்களிலும் பங்கேற்காமல் தமிழ்குமரன் தன்னிச்சையாக செயல்பட்டார். இந்நிலையில், காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார் தமிழ்குமரன். அவர், தருமபுரி மாவட்டம் பென்னாகரம் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட உள்ளதாக தகவல் வெளியானது.

இந்தச் சூழலில் பாமக இளைஞர் சங்க தலைவர் பதவி மற்றும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்குவதாக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “பாமக மாநில இளைஞர் சங்க பொறுப்பு வழங்கிய பிறகு கட்சி பணியை செய்யாமலும், இளைஞர் சங்க பொறுப்புகளில் ஆர்வம் காட்டாமலும், கட்சியின் நற்பெயருக்கு களங்கம் விளைவித்தும், கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதால் தமிழ்குமரன் நீக்கப்படுகிறார்” என்று தெரிவித்துள்ளார்.

இதே குற்றச்சாட்டை கடந்த ஒன்றரை ஆண்டுகளாக அன்புமணி கூறி வந்த நிலையில், தற்போது ராமதாஸ் அதை வழிமொழிந்திருப்பதாக அன்புமணியின் ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.

மேலும் அவர்கள், “திமுகவுடன் இணைந்து தேர்தலை சந்திக்க தமிழ்குமரன் தயாரானார். ஆனால், அன்புமணியின் கூற்று உண்மையாகி, தந்தை ஜி.கே.மணிக்கு சிக்கல் ஏற்பட்டுவிடும் என்பதால், காங்கிரஸ் கட்சியில் சாதுர்யமாக இணைந்து தேர்தல் சந்திக்க திட்டமிட்டுள்ளார். தமிழ்குமரன் மீதான நடவடிக்கை காலதாமதமானது” என்று தெரிவிக்கின்றனர்.

<div class="paragraphs"><p>பாமக மாநில இளைஞர் சங்கத் தலைவராக 2-வது முறையாக தமிழ்குமரனை கடந்த அக்டோபர் மாதம் நியமித்து ஆணை வழங்கிய நிறுவனர் ராமதாஸ்.&nbsp; (கோப்பு படம்)</p></div>
திருச்சி கிழக்கு தொகுதியை விஜய் ‘டிக்’ செய்தது ஏன்?

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in