‘பாமக சார்பில் அன்புமணி கூட்டணி பேச்சில் ஈடுபடுவது சட்ட விரோதம்’ - ராமதாஸ் தரப்பு

Ramadoss
Updated on
1 min read

சென்னை: ‘பாமக சார்பில் அன்புமணி கூட்டணிப் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவது சட்ட விரோதம். கட்சியின் விதிப்படி ராமதாஸ் மட்டுமே யாருடனும் கூட்டணி பேச உரிமை உள்ளவர்’ என அவரது தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து குறித்து ராமதாஸ் தரப்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், “டெல்லி உயர் நீதிமன்ற தீர்ப்புக்குப் பிறகு பாட்டாளி மக்கள் கட்சிக்கு மருத்துவர் ராமதாஸ் மட்டுமே நிறுவனத் தலைவராக இருந்து கட்சியை வழிநடத்தி வருகிறார். 17.12.2025 முதல் மருத்துவர் ராமதாஸ் தான் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு செயற்குழு மற்றும் பொதுக்குழுவால் அங்கீகரிக்கப்பட்டு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியபடி அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

பாட்டாளி மக்கள் கட்சியுடன் தேர்தல் கூட்டணி என்று அன்புமணியுடனோ அல்லது வேறு எவரிடமோ எந்த அரசியல் கட்சியும் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்த இயலாது. மருத்துவர் ராமதாஸ் மட்டுமே செயற்குழு மற்றும் பொதுக்குழுவால் தேர்தல் கூட்டணி பேசும் அதிகாரம் பெற்றவர்.

இந்நிலையில், அன்புமணி பாட்டாளி மக்கள் கட்சி சார்பாக தேர்தல் கூட்டணி பேசியதாக செய்தி வெளியாகி உள்ளது. அந்த தகவல் நீதிமன்றத்தை அவமதிக்கும் செயல். அப்படி ஒரு கூட்டணி பேச்சு நடந்திருந்தால் அது சட்ட விரோதம். கட்சி விதிப்படி மருத்துவர் ராமதாஸ் மட்டுமே யாருடனும் கூட்டணி பேச உரிமை உள்ளவர்’ என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, ‘தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் நடைபெறவுள்ள 2026 சட்டமன்ற பொதுத் தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் சட்டமன்ற வேட்பாளராக போட்டியிட விரும்புவோர் தங்களது விருப்ப மனுக்களை 09.01.2026 வெள்ளிக்கிழமை காலை 10.00 மணி முதல் தைலாபுரம் தோட்டத்தில் வழங்கலாம்.

விருப்ப மனுக்கள் தைலாபுரம் அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளலாம். மனுக்களை பூர்த்தி செய்து கொடுத்தவுடன், பெற்றுக் கொண்டதற்கான ரசீது உடனே வழங்கப்படும்’ என ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

Ramadoss
அதிமுக கூட்டணியில் பாமக: பழனிசாமி, அன்புமணி கூட்டாக அறிவிப்பு!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in