

அருள் (இடது), அன்புமணி (வலது)
சேலம்: “அன்புமணியை தலைவராக ஏற்றுக்கொள்ளப் போவதில்லை. வன்னியர் மக்களை வைத்து பிழைப்பு நடத்திக் கொண்டுள்ள அன்புமணியை தமிழக மக்கள் புறக்கணிக்க வேண்டும்” என பாமக முன்னாள் எம்எல்ஏ அருள் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் செய்தியாளர்களிடத்தில் பேசும்போது, “அன்புமணியை தலைவராக ஏற்றுக்கொள்ளப் போவதில்லை. வன்னியர் மக்களை வைத்து பிழைப்பு நடத்திக் கொண்டுள்ள அன்புமணியை தமிழக மக்கள் புறக்கணிக்க வேண்டும். நாங்கள் யாருக்கும் எதிரானவர்கள் இல்லை.
இனி எந்த பாதை என்பதை ஆலோசித்து முடிவெடுப்பேன். எப்போதும் எனக்கு ராமதாஸ்தான் கடவுள். அரசியல் துறவறம் பூண்டுவிட்டேன் என ராமதாஸ் தெரிவித்துவிட்டார்.
அடுத்து அன்புமணியை தலைவராக ஏற்றுக்கொள்ள கூடாது என ஐயா பாமகவினர் சொல்லிவிட்டதால், அதை நாங்கள் ஏற்றுக் கொண்டுவிட்டோம். அன்புமணி ஒரு நடிகர்; அம்மாவை அடித்தவர் என ராமதாஸே சொல்லியுள்ளார். அப்பாவும் மகனும் இணைந்ததை நாங்கள் பாராட்டுகிறோம். ஆனால் ஐயா பாமகவினர், அன்புமணியை ஏற்கமாட்டோம்.
புதிய கட்சியா, வேறு கட்சியில் இணைவதா என்பது குறித்து விரைவில் முடிவு எடுப்போம். நாங்கள் வேறு கட்சிக்கே சென்றாலும், ராமதாஸ் தான் எங்களுக்கு கடவுள். அதிமுக, திமுகவில் சேரும்படி அழைப்புகள் வந்தது. எங்களுக்கு பல கட்சிகளில் இருந்தும் அழைப்பு வந்திருக்கிறது.
ஆனால், வாழ்க்கை முழுவதும் அண்ணன் அன்புமணியை தலைவராக ஏற்றுக் கொள்ள வாய்ப்பே இல்லை. தமிழகம் முழுவதும் கருத்து கேட்கும் கூட்டம் நடத்த இருக்கிறோம். பின்னர் இது குறித்து முடிவு செய்யப்படும்” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.