“டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்தது இபிஎஸ்-தான்”: அன்புமணி

“டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்தது இபிஎஸ்-தான்”: அன்புமணி
Updated on
2 min read

கும்பகோணம்: “டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்தது இபிஎஸ் தான். இல்லையென்றால் திமுகவினர் மீத்தேன், ஹைட்ரோ கார்பன் போன்ற நிறுவனங்களைக் கொண்டு வந்து டெல்டாவை நாசப்படுத்தி இருப்பார்கள்” என பாமக தலைவர் அன்புமணி விமர்சித்துள்ளார்.

கும்பகோணம் காந்தி பூங்கா அருகில் கும்பகோணம் அசோக்குமார், பாபநாசம் துரை சண்முகபிரபு, திருவிடைமருதூர் இளமதி ஆகியோருக்கு வாக்கு கேட்க வந்த பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி, இன்று காலை சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோயிலில் சுவாமி தரிசனம் மேற்கொண்டார். பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர், “தமிழகத்தில் மிகவும் மோசமான திமுக ஆட்சி நடைபெறுகிறது. இந்த ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை, குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்கின்ற ஆட்சியாக திமுக ஆட்சி அமைந்துள்ளது.

பெண்கள், குழந்தைகள் மீதான வன்கொடுமைகள் பாலியல் தாக்குதல் அதிகரித்துள்ளது. நானும் டெல்டாகாரன் தான் என முதல்வர் மு.க.ஸ்டாலின் சொல்கிறார். இதுதான் உலகத்திலே மிகச்சிறந்த நகைச்சுவை. டெல்டாவில் விவசாயிகள் மிகவும் கஷ்டமான சூழலில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

ஆனால் ஒவ்வொரு மாவட்டத்திலும் அந்த மாவட்டத்திற்கு ஏற்ப ஏதோ ஒன்றை முதல்வர் பேசிக் கொண்டிருக்கிறார். முதல்வரை ஒரு பொம்மை போல வைத்துக் கொண்டு அவரை சுற்றி 4 பேர் இயக்கிக் கொண்டிருக்கிறார்கள். தமிழகத்தின் பிரச்சினை என்னவென்று அவருக்கு தெரியவில்லை. அவரை சுற்றி உள்ள 4 வியாபாரிகள் பணத்தை சம்பாதித்துக் கொண்டிருக்கிறார்கள்.

தமிழகம் முழுவதும் திமுகவுக்கு எதிரான அலை வீசிக் கொண்டிருக்கிறது. அதிமுக கூட்டணி 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற்று தமிழகத்தின் முதல்வராக பழனிசாமி ஆவார். 2021 தேர்தலுக்கு முன் தற்போதைய முதல்வர், 'நான் ஆட்சிக்கு வந்தவுடன் தஞ்சாவூர் மாவட்டத்தில் இருந்து கும்பகோணத்தை தனியாக பிரிப்பேன்' என வாக்குறுதி அளித்தார். ஆனால் 5 ஆண்டு காலத்தில் அறிவிக்க வில்லை.

திமுக ஆட்சியில் ஒரு மாவட்டத்தை கூட பிரிக்கவில்லை. அரசு சேவைகளை பெறுவதற்கு கும்பகோணத்திலிருந்து தஞ்சாவூர் வரை பயணிக்க வேண்டிய நிலை இருக்கிறது. ரூ. 8 ஆயிரம் போலி கூப்பனை வழங்கி திமுகவினர் மக்களை முட்டாளாக்கி விடலாம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் தமிழக மக்கள் தெளிவாக இருக்கிறார்கள். டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்தது இபிஎஸ் தான். இல்லையென்றால் திமுகவினர் மீத்தேன், ஹைட்ரோ கார்பன் போன்ற நிறுவனங்களைக் கொண்டு வந்து டெல்டாவை நாசப்படுத்தி இருப்பார்கள். முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு விவசாயிகளின் கஷ்டம் பற்றி எதுவும் தெரியாது.

முதல்வர் மு.க.ஸ்டாலின், பழனிசாமியை தரம் தாழ்ந்து விமர்சனம் செய்து கொண்டிருக்கிறார். எங்களுக்கும், திமுகவை பற்றி, அவர்களின் குடும்பத்தை பற்றி பேச தெரியும். அப்படி பேசினால் அது தரம் தாழ்ந்து போகும் என்பதனால் நாங்கள் அமைதியாக இருக்கிறோம். திமுக 5 ஆண்டு காலம் ஆட்சி செய்த சாதனைகளை கூறி வாக்கு கேட்க துப்பு இல்லை. அவர்களுக்கு மக்கள் நிச்சயம் பாடம் கற்பிப்பார்கள் எனத் தெரிவித்தார்.

தொடர்ந்து நேற்று மாலை, கும்பகோணம் காந்தி பூங்கா அருகில், கும்பகோணம், திருவிடைமருதூர், பாபநாசம் ஆகிய 3 தொகுதி அதிமுக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரமாக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வாக்கு சேகரித்தார்.

“டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்தது இபிஎஸ்-தான்”: அன்புமணி
“நிதியமைச்சர் பதவியிலிருந்து கீழே இறக்கப்பட்டது ஏன்?” - பழனிவேல் தியாகராஜனுக்கு சுந்தர் சி கேள்வி

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in