“எனது மரணத்துக்காக ஒரு கூட்டம் காத்திருப்பு” - பாமக நிறுவனர் ராமதாஸ் கடும் வேதனை

மகள் ஸ்ரீகாந்தி, பேரன் முகுந்தனுடன் தைலாபுரத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த பாமக நிறுவனர் ராமதாஸ்.

மகள் ஸ்ரீகாந்தி, பேரன் முகுந்தனுடன் தைலாபுரத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த பாமக நிறுவனர் ராமதாஸ்.

Updated on
2 min read

விழுப்புரம்: கடந்த சில தினங்களுக்கு முன் சேலம் பிரச்சாரக் கூட்டத்தில் மயங்கி விழுந்த பாமக நிறுவனர் ராமதாஸ் சென்னை அப்பலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, உடல்நலம் சீராகி தைலாபுரம் திரும்பினார். அங்குள்ள தனது இல்லத்தில் நேற்று அவர் தபால் வாக்கு செலுத்தினார்.

பின்னர் ராமதாஸ் செய்தியாளர்களிடம் கூறியது ‘நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம்’ என்று இருந்த எனது குடும்பத்தை சிதைத்த பெருமை அன்புமணியின் மனைவி சவுமியாவைச் சேரும். என் பேத்திகளையும் மயக்கி, மாற்றி விட்டார்.

‘என்னை குல தெய்வம்’ என்று பேசி விட்டு, அவரிடம் இருக்கும் பணத்தை வைத்து, என்னுடன் இருந்த கட்சியின் முன்னோடிகளை பொய் பேசும் கூடாரத்துக்கு அழைத்துச் சென்று விட்டார்.

உடல் நலம் சரியில்லாமல் நான் மருத்துவமனையில் இருந்தபோது, ‘நான், பார்க்க அனுமதிக்கவில்லை’ என்று பொய்யர்கள் சொல்கின்றனர். அவர் பெற்ற பிள்ளைகளும் பொய் சொல்வதில் வல்லவர்கள். பாசத்தை வேரறுத்து குளிர் காய்கின்றனர் என்றார்.

அப்போது குறுக்கிட்ட அவரது மகள் ஸ்ரீகாந்தி, “மருத்துவமனையில் இருமுறை இருந்தபோது யாருமே வந்து பார்க்கவில்லை, போன் கூட செய்யவிலலை என்று கூறுங்கள்” என்று தந்தையிடம் கேட்டுக்கொண்டார். தொடர்ந்து பேசிய ராமதாஸ், “பொய்யர் குடும்பத்தினர் என்னை வந்து பார்க்கவில்லை, போன் கூட செய்யவில்லை.

எனக்கு ஆஞ்சியோ செய்த போது, தமிழகத் தலைவர்கள் அனைவரும் நலம் விசாரித்த போதும் கூட அன்புமணி மற்றும் அவரது குடும்பத்தினர் வந்து பார்க்கவில்லை. ‘எனக்கு வயதாகிவிட்டது, செயல்பட முடியாது’ என்று பொய்யர் கூட்டம் தொடர்ந்து கூறி வருகிறது. நான் தினசரி கால் முதல் தலை வரை அனைத்துக்கும் பயிற்சி செய்கிறேன்.

உடல் நலம் ஆரோக்கியமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அதேநேரத்தில் ஒரு வாரத்துக்கு பிரச்சாரம் செய்யக் கூடாது என்று அறிவுறுத்தியிருக்கினறனர்.

சிறப்பாக பிரச்சாரம் செய்ய வேண்டும் என்று எண்ணினேன். முடியுமா என்று தெரியவில்லை. நமது பாமக வேட்பாளர்கள் மற்றும் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பாட்டாளி சொந்தங்கள் அனைவரும் முழு ஆதரவு அளித்து வாக்களிக்க வேண்டும்.

பாமகவை என்னிடம் இருந்து அபகரித்து விட்டனர். எப்போது எனக்கு மரணம் வரும் என ஒரு கூட்டம் காத்திருக்கிறது. மகன், மருமகள், பேத்திகள் கூட அப்படி நினைக்கின்றனர். அன்புமணி நல்ல பிள்ளை இல்லை.

குழப்பத்தை ஏற்படுத்தி கட்சியை அபகரித்து விட்டார். ‘எனக்கு மனநிலை சரியில்லை’ என்று கூறுகிறார். என்னுடைய படத்தை அவர்கள் போடக்கூடாது என வழக்கு தொடரப்பட்டுள்ளது. பாமக பலவீனமடையாது” என்றார்.

தொடர்ந்து பேசிய ராமதாஸ் மகள் வழி பேரன் முகுந்தன், “பிரச்சினை என்னிடம் இருந்து தொடங்கியதால், நான் பேசுகிறேன். எனக்கு எம்எல்ஏ சீட்டு தருவதாகவும், செலவை ஏற்றுக் கொள்கிறேன் என்றும் வாக்குறுதி அளித்திருந்தனர். இதற்கான ஆதாரம் உள்ளது.

இப்போது நான், அரசியல் எதுவும் வேண்டாம், அய்யாவுடன் மட்டும் இருக்கிறேன். அவர்களோ அய்யாவின் முகம், பெயர் வேண்டும். ஆனால் அய்யா வேண்டாம் என்கின்றனர். ‘குடும்பத்தை பிரித்து விட்டார்’ என்று ஜி.கே.மணி மீது குற்றம் சொல்கின்றனர்.

அன்புமணி, சவுமியா ஆகியோரின் பணத்தாசை மட்டுமே குடும்பத்தை பிரித்தது. நான் நிறைய விஷயங்களை பேசினால், அவர்களால் வெளியே வர முடியாது. அன்புமணிக்கும், அவரது இரு மகள்களுக்கும் சவால் விடுக்கிறேன். என்னுடன் உண்மையை பேச தயாரா? எங்கு அழைத்தாலும் நான் வருகிறேன்.

2019, 2020, 2021, 2024-ல் என்ன நடந்தது? என் அம்மா காலில் நீங்கள்தான் விழுந்தீர்கள். பாஜக என்னை எதையாவது செய்துவிடும் என என்னுடைய அம்மா காலில் விழுந்தது நீங்கள்தானே..! அதிமுகவின் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்தை போனில் தொடர்பு கொண்டு, மறுநாள் காலை வரச் சொன்னது நான்தானே! அனைத்து நிகழ்விலும் உங்களுடன் நான் இருந்துள்ளேன்.

அய்யா நினைத்தபடி செயல்பட்டிருந்தால், ஆட்சி அதிகாரத்தில் பாமக இருந்திருக்கும். தன்னுடைய பிள்ளைக்காக சமரசம் செய்த காரணத்தால், பாமக அங்கீகாரத்தை இழந்துள்ளது. அய்யாவை நம்பி வன்னியர்கள் வந்தார்கள். நீங்கள் யாரை வேண்டுமானாலும் நம்புங்கள், அவர்களை நம்பாதீர்கள்” என்றார்.

<div class="paragraphs"><p>மகள் ஸ்ரீகாந்தி, பேரன் முகுந்தனுடன் தைலாபுரத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த பாமக நிறுவனர் ராமதாஸ்.</p></div>
தொண்டாமுத்தூர் தொகுதியில் தெறிக்க விடப்போவது யார்?

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in