

ராமதாஸ்
திண்டிவனம் அடுத்த தைலாபுரம் தோட்டத்தில் உள்ள அரசியல் பயிலரங்கில் பாமக சமூக ஊடகப் பேரவை மாநில நிர்வாகிகள் கூட்டம் பாமக செயல் தலைவர் காந்தி தலைமையில் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் பங்கேற்று பேசும்போது, ‘‘தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் தருவாயில் பொறுப்பாளர்கள் தொய்வாக செயல்படாமல் வேகமாக செயல்பட வேண்டும். சமூக ஊடகங்களில் கருத்துகளை பதிவிடும்போது கவனமாக கையாள்வதோடு, தனிமனித விமர்சனங்களை தவிர்க்க வேண்டும்’’ என்றார்.
இதைத்தொடர்ந்து கூட்ட அரங்கை விட்டு வெளியே வந்த ராமதாஸிடம் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அவர் பதிலளிக்கையில், “தேர்தல் கூட்டணி தொடர்பாக பேசிக்கொண்டிருக்கிறோம். தற்போது வரை பாஜக, திமுக, அதிமுக உள்ளிட்ட எந்த அரசியல் கட்சியும் என்னிடம் தேர்தல் கூட்டணி குறித்து எதுவும் பேசவில்லை. எந்த அரசியல் கட்சியுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திப்பது என்பது குறித்து, கட்சியின் நிர்வாகிகளிடம் பேசிக்கொண்டிருக்கிறோம். 2026 சட்டப்பேரவைத் தேர்தல் அமைதியாக நல்ல முறையில் நடைபெற வேண்டும் என்பதுதான் எனது விருப்பம்” என்றார்.
தேர்தல் ஆணையத்துக்கு கடிதம்: இதனிடையே, தேர்தல் ஆணையத்துக்கு ராமதாஸ் எழுதியுள்ள கடிதத்தில், ‘‘பாமக பெயரை சட்டவிரோதமாக பயன்படுத்தும் அன்புமணி மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும். பாமக தலைவர் என அன்புமணி உரிமை கோர முடியாது. தேர்தல் கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த எனக்கு மட்டுமே உரிமை உள்ளது.
அதிமுகவுடன் கூட்டணி குறித்து அன்புமணி பேச்சு நடத்தியது சட்டவிரோதமானது. தேர்தல் ஆணையத்திற்கு எதிராக மோசடி செயல்களில் ஈடுபட்டு தலைவர் பதவி காலத்தை அன்புமணி நீட்டித்துக் கொண்டார். இதற்கு எதிரான வழக்கு டெல்லி உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது. அனுமதியின்றி பாமக பெயரை அன்புமணி பயன்படுத்துவது குறித்து தேர்தல் ஆணையம் விளம்பரம் செய்ய வேண்டும்’’ என்று கூறியுள்ளார்.