

திமுகவை இந்த மண்ணில் இருந்து வெளியேற்ற வேண்டும் என , கோவையில் பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில் கட்சியின் தேசிய செயல் தலைவர் நிதின் நபின் பேசினார்.
கோவை சிங்காநல்லூர் சட்டப்பேரவைத் தொகுதி பாஜக பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் பாஜக தேசிய செயல் தலைவர் நிதின் நபின் பேசியதாவது: ஒரு சாதாரண பூத் தலைவர் தேசிய தலைவராகலாம். இது பாஜகவில் மட்டும் தான் முடியும். பாஜக தேசியத்தை முதன்மைப்படுத்தி ஆட்சியை 2-ம் இடத்தில் வைக்கிறது. தேசியத் தலைவரும், மண்டலத் தலைவரும் ஒன்றாக நிற்பது தான் இந்த பாஜக மேடை.
தமிழ்நாட்டை ஆளும் திமுக, திரும்பிய பக்கமெல்லாம் ஊழலில் திளைக்கிறது. குடும்பத்தின் ஆட்சி நடக்கிறது. பூத் அமைப்பை நாம் வலுப்படுத்த வேண்டும். பூத் அளவில் பாஜக வலிமை பெறும்போது, நிச்சயம் நமக்கு வாக்குகள் கிடைக்கும். ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை பிரதமர் மோடி வானொலியில், ’மனதின் குரல்’ நிகழ்வில் பேசுகிறார். இதனை நாம் மக்களிடம் கொண்டுபோய் சேர்க்க வேண்டும். அவர்களை ஓரிடத்தில் திரட்டி, நம்முடைய சாதனைகளை சொல்லும் நேரத்தில், ஆளும் திமுக அரசின் குறைகளை நாம் பொதுமக்களிடம் சொல்ல முடியும்.
திமுக அரசுக்கு எதிராக கடும் போராட்டத்தை கையிலெடுப்போம். உள்ளூர் பிரச்சினைகளுக்கு தொடர்ந்து ஆர்ப்பாட்டம் உள்ளிட்டவைகளில் ஈடுபடுவோம். வரும் தேர்தலில் அனைவரும் ஒன்றிணைந்து தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற வேலை செய்ய வேண்டும். வரும் தேர்தலில் திமுகவை இந்த மண்ணில் இருந்து வெளியேற்ற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மகளிரணி தேசிய தலைவர் வானதி சீனிவாசன், ‘‘திமுக ஆட்சிக்கு வந்த பிறகு எந்தவிதமான இந்துக்களின் பண்டிகைகளுக்கும், முதல்வர் ஸ்டாலின் வாழ்த்துகளை தெரிவிப்பதில்லை. பொங்கல் பண்டிகையின்போது மட்டும், சமத்துவ பொங்கல் கொண்டாடுகிறார். தை பிறந்தால் வழி பிறக்கும் என்பார்கள். பிரதமர் மோடி விரைவில் தமிழகம் வருகிறார். அதன் பின்னர் தேர்தல் பணிகள் வேகம் எடுக்கும்” என்றார்.
முன்னதாக, மாநகர் மாவட்ட பாஜக சார்பில் வடவள்ளியில், ‘நம்ம ஊரு மோடி பொங்கல்’ நேற்று நடந்தது. இதில் நிதின் நபின், தமிழர் பாரம்பரிய உடையான பட்டு வேஷ்டி, சட்டை அணிந்து பங்கேற்றார். தமிழில் பொங்கல் வாழ்த்துக்கள் தெரிவித்தார். பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், மகளிரணி தேசிய தலைவர் வானதி சீனிவாசன், முன்னாள் மாநில தலைவர்கள் தமிழிசை சவுந்தரராஜன், அண்ணாமலை ஆகியோர் பங்கேற்றனர். இதில் 120 பொங்கல் பானைகள் வைத்து கொண்டாடப்பட்டது. வள்ளிக்கும்மி, சிலம்பம், பரதம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.